

நியூஸிலாந்துக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரில் விராட் கோலி பேட்டிங்கில் கடுமையாகச் சொதப்பியிருக்கலாம், சராசரி 9.50 ஆக இருக்கலாம், ஆனால் கேப்டனாக விராட் கோலி 5,000 டெஸ்ட் ரன்களைக் கடந்தவர்.
மொத்தம் 55 டெஸ்ட்களில் விராட் கோலி 5,146 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் ஒட்டுமொத்தமாக 6வது இடத்தில் இருக்கிறார்.
கேப்டனாக அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் 109 டெஸ்ட்களில் 8,659 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார்.
ரிக்கி பாண்டிங் 77 டெஸ்ட்கள் கேப்டனாக ஆடியதில் 6542 ரன்களையும், ஆலன் பார்டர் 93 டெஸ்ட்களில் கேப்டனாக 6623 ரன்களையும் எடுத்துள்ளனர். மே.இ.தீவுகளின் கிளைவ் லாய்ட் 74 டெஸ்ட்களில் கேப்டனாக 5233 ரன்களையும் ஸ்டீபன் பிளெமிங் 80 டெஸ்ட்களில் கேப்டனாக 5156 ரன்களையும் எடுத்துள்ளனர்.
இதில் சராசரி அளவின்படி பார்த்தால் கேப்டனாக ஆஸ்திரேலிய லெஜண்ட் டான் பிராட்மேன் 101.51 என்ற சராசரியில் அசைக்க முடியா இடத்தில் இருக்க, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக 70.36 ரன்கள் சராசரி வைத்திருக்க 3வது இடத்தில் விராட் கோலி கேப்டனாக 61.21 என்ற பேட்டிங் சராசரி வைத்துள்ளார். அதாவது கேப்டனாக குறைந்தது 3,000 டெஸ்ட் ரன்களை எடுத்தவர்கள் என்ற அடிப்படையில்.