Published : 10 Mar 2020 11:50 AM
Last Updated : 10 Mar 2020 11:50 AM

ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக டி20 உங்களை உருவாக்காது: முன்னாள் இலங்கை அதிரடி மன்னன் ரொமேஷ் கலுவிதரானா

50 ஓவர் கிரிக்கெட்டிலும் டெஸ்ட் போட்டிகளிலும் தான் ஆடும் போது கிளென் மெக்ரா, ஷேன் வார்ன் போன்ற பெரிய வீச்சாளர்களையும் தன் பவர் ஹிட்டிங் மூலம் பவர் ப்ளேயில் அச்சுறுத்திய இலங்கையின் முன்னாள் அதிரடி மன்னன் ரொமேஷ் கலுவிதரானா, இளம் வீரர்கள் டி20யில் அதிக கவனம் செலுத்தக் கூடாது என்று கூறியுள்ளார்.

1996 உலகக்கோப்பையை இலங்கை அணி வென்றதற்கு கேப்டன் அர்ஜுணா ரணதுங்கா தலைமை ஒரு காரணி என்றால் ரோமேஷ் கலுவிதராணா, ஜெயசூரியா அதிரடி தொடக்கமும் காரணம். குறிப்பாக விக்கெட் கீப்பிங்கில் கொல்கத்தா அரையிறுதியில் சச்சின் டெண்டுல்கரை கலுவிதரானா அவுட் செய்த விதம் பெரிய திருப்பு முனையையே ஏற்படுத்தி சர்ச்சைக்குரிய போட்டியாக அது மாற காரணமாக அமைந்தது.

ரோட் சேஃப்டி உலக டி20 தொடரில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியில் கலுவிதரானா ஆடுகிறார். ஆஸி. லெஜண்ட் அணியை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். அவர். இவர் தன் அறிமுக டெஸ்ட் போட்டியில் 142 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளாசினார், இதில் லெஜண்ட் ஷேன் வார்னை மட்டுமே 80 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஓய்வுக்குப் பிறகு 11 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்தேன். இலங்கை ஏ அணிக்கு 6 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்தேன். பயிற்சியை விட்டு விட்டு பிறகு நான் எந்த சொந்த வர்த்தகமான ஹாலிடே ரிசார்ட்டில் கவனம் செலுத்தினேன். இப்போதைக்கு கிரிக்கெட்டுடன் எனக்குத் தொடர்பில்லை.

எனக்கு இன்றைய கிரிக்கெட்டில் பல பேட்ஸ்மென்களைப் பிடித்திருந்தாலும் விராட் கோலியின் கடின உழைப்பு என்னைக் கவர்கிறது, எப்போதும் ரன்கள் எடுத்தவண்ணம் இருக்கிறார். எந்தச் சூழ்நிலையிலும் எந்த ஒரு கிரிக்கெட்டிலும் விராட் கோலி ஆட்டத்தைப் பார்க்க பிடித்திருக்கிறது.

ஒரு 19 வயது கிரிக்கெட் வீரர் வளரும் பருவத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தக் கூடாது என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் இந்த வயதில் ஒருவர் கிரிக்கெட் இன்னிங்ஸை எப்படி கட்டமைப்பது, கரியரை எப்படி வடிவமைப்பது என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும்.

டி20-யில் மட்டும் கவனம் செலுத்தினால் ரிஸ்க் அதிகம். ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக டி20 உங்களை உருவாக்காது. அதாவது டெக்னிக் மட்டத்தில் நீங்கள் சிறந்து விளங்க முடியாது.

எனவே எந்த ஒரு வீரரும் டி20-யில் தொடங்குவதை நான் பரிந்துரை செய்ய மாட்டேன், என்றார் கலுவிதரானா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x