

ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் இந்திய வீரர் அமித் பங்கால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஆசிய அளவிலான ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 52 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அமித் பங்கால், பிலிப்பைன்ஸின் கார்லோ பாலமை எதிர்த்து விளையாடினார். இதில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார் அமித் பங்கால்.
அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் வரும் ஜூலை மாதம் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் அமித் பங்கால். ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள அமித் பங்கால் தகுதி பெறுவது இதுவே முதன்முறை.
இதுவரை அமித் பங்காலுடன் விகாஷ் கிருஷ்ணன் (69 கிலோ எடைப் பிரிவு), பூஜா ராணி (75), சதீஷ் குமார் (91 ), லோவ்லினா போர்கோஹெய்ன் (69), ஆஷிஷ் குமார் (75) ஆகிய 6 இந்தியர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாக் ஷி சவுத்ரி 0-5 என்ற கணக்கில் கொரியாவின் இம் ஏஜி-யிடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தற்போதைக்கு இழந்துள்ள சாக் ஷி சவுத்ரி, வரும் மே மாதம் நடைபெறும் மற்றொரு தகுதி சுற்றில் பங்கேற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அமித் பங்கால்