

சாலைப்பாதுகாப்பு டி20 கிரிக்கெட் தொடரில் அன்று மும்பையில் இந்தியன் லெஜன்ட்ஸ் அணியின் சச்சின், சேவாக் அதிரடி ஆட்டத்தில் மும்பை ஸ்டேடியமே மகிழ்ச்சிக்க்கடலில் துள்ளியது. சேவாக் தன் அபாரமான கட்ஷாட்களை வெளிப்படுத்தி 11 பவுண்டரிகளை விளாசி 74 நாட் அவுட் என்று ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
இந்த ஆட்டம் குறித்து சேவாக் கூறியதாவது:
நான் களத்தில் இறங்கும் போது உடல் பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் இறங்கினால் அது எவ்வளவு பெரிய ரிஸ்கோ அதே போல்தான் சாலையிலும் வாகனங்களில் செல்பவர்கள் பாதுகாப்புக் கவசங்களை அணியாமல் செல்வது உயிருக்கு ஆபத்தான விவகாரமாகும். காரில் செல்பவர்கள் சீட்பெல்ட் அணிவது அவசியம், சாலையாக இருந்தாலும் மைதனமாக இருந்தாலும் பாதுகாப்பு முக்கியம்.
ஸ்டேடியம் ஃபுல் ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஆச்சரியம்தான். சச்சின் டெண்டுல்கருடன் பேட் செய்வதே ஒரு அலாதி மகிழ்ச்சி, எதிர்முனையிலிருந்து அவர் ஆட்டத்தை ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
அவர் ஆடிய ஷாட்களை பார்த்தால் இன்னும் போட்டியில் இருக்கிறார் போல்தான் தெரிகிறது, ஓய்வு பெறவில்லை என்பது போல்தான் இருக்கிறது. இந்தப் போட்டியில் கூட வெல்ல வேண்டும் என்று சீரியசாக ஆடுகிறார். தெரு கிரிக்கெட்டாக இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டாக இருந்தாலும் வெற்றிதான் அவர் குறிக்கோள்.
டெண்டுல்கர் எப்படி சீரியஸ் என்றால் அன்றைய ஆட்டத்தில் கூட என்னிடம் வந்த் ரிஸ்க் எடுக்காதே என்றார், பிறகு தட்டி விட்டு ஒரு ரன் எடுக்கிறார், 2 ரன்களுக்கு ஓடுகிறார். கேளிக்கைதான், நாங்கள் ஒருவரையொருவர் பரஸ்பரம் கேலி கிண்டல் செய்து கொள்வோம், ஆனால் அவரது சீரியஸ் தன்மை பாராட்டப்பட வேண்டியது.
இவ்வாறு கூறினார் சேவாக்.