

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக 13-வது ஐபிஎல் போட்டி வரும் 29-ம் தேதி திட்டமிட்டபடி தொடங்குமா, தொடர்ந்து நடக்குமா என்பது பெரும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், " ஐபிஎல் டி20 போட்டி திட்டமிட்டபடி வரும் 29-ம் தேதி தொடங்கும். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்
ஆனால், கரோனா வைரஸ் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வேகமாகப் பரவும் வாய்ப்பு இருப்பதால், ஐபிஎல் போட்டியை ஒத்திவைக்கும் ஆலோசனை நடப்பதாக மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். இதனால் குழப்பமான சூழல் நிலவுவதால், ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா எனும் கேள்வி எழுந்துள்ளது
13-வது ஐபிஎல் போட்டி வரும் 29-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த தொடர் மே 29-ம் தேதி வரை நடக்கிறது.
ஆனால், கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது வேகமாகவும் பரவிவருகிறது. இதைத் தடுக்க பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவும், போதுமான அளவில் மருந்துகள் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டது.
மேலும், மருத்துவமனைகள் தயாராக இருக்கவும், கரோனா வைரஸாஸ் பாதிக்கப்பட்டவர்களைத் தனியாகப் பிரித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவும் பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
அதுமட்டுமல்லாமல் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் கரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்கள் இருப்பதால் அதுபோன்ற நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள், விழாக்களை ரத்து செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் பெரிய அளவில் ஹோலி கொண்டாட்டங்கள் ஏதும் இந்தமுறை இல்லை.
அந்த வகையில் ஐபிஎல் போட்டி பல்வேறு நகரங்களில் நடத்தப்படும் போது ஏராளமான ரசிகர்கள் போட்டியைக் காண வருவார்கள். அவர்களில் யாரேனும் சிலருக்கு கரோனா வைரஸ் தாக்கம் இருந்தால், கூட்டத்தில் அது வேகமாகப் பரவுவதற்கான சாத்தியம் உண்டு. இதனால் ஐபிஎல் போட்டியை தற்காலிகமாக ரத்து செய்யவும் ஒருதரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்
அதுமட்டுமல்லாமல், தற்போது இந்தியாவில் 43 பேருக்குதான் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. இன்னும் ஐபிஎல் போட்டிக்கு 20 நாட்கள் வரை இருப்பதால், அதற்கு கரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடையும் போது நிச்சயம் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
இதுகுறித்து மகாராஷ்டிரா அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில், " ஒரு இடத்தில் அதிகமான மக்கள் கூடும்போது அங்கு ஒருவருக்கு கரோனா வைரஸ் இருந்தாலும் அது வேகமாகப் பரவுவதற்கான ஆபத்து இருக்கிறது. ஆதலால், சிறிது காலத்துக்கு அதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தாமல் தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஐபிஎல் போட்டியைத் தாமதப்படுத்தலாம். ஐபிஎல் போட்டியை தள்ளி வைக்கலாமா என்பது குறித்தும் அதிகாரிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது விரைவில் முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
ஆனால், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம், ஐபிஎல் போட்டி குறித்து நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறுகையில், " நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுப்போம். என்ன மாதிரியான நடவடிக்கை என்பது எனக்குத் தெரியாது, எங்களின் மருத்துவக்குழு அந்த நடவடிக்கைகளை முடிவு செய்யும். மருத்துவமனைகளுடன் எங்களின் மருத்துவக்குழு தொடர்பில் இருந்து வருகிறது. ஆதலால், திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நடக்கும்" எனத் தெரிவித்தார்
இருப்பினும், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களைத் தவிர்க்குமாறு பல்வேறு நாடுகளும் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் உலகளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதே காரணத்தைத்தான் பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது. ஆதலால், மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு முடிவு எடுத்தால், ஐபிஎல் போட்டி நடத்துவதில் சிக்கல் ஏற்படும்.
இதனால் இந்த ஆண்டு திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நடக்குமா என்பது கரோனா வைரஸ் அடுத்துவரும் நாட்களில் எவ்வாறு கட்டுப்படுத்தப்படும், அதன் வீரியம், பரவுதல் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.