கரோனா வைரஸ்; இந்திய வீரர்களுடன் கைகுலுக்குவீர்களா?: தெ.ஆப்பிரிக்க பயிற்சியாளர் பவுச்சர் பதில்

மார்க் பவுச்சர் : கோப்புப்படம்
மார்க் பவுச்சர் : கோப்புப்படம்
Updated on
1 min read

இந்தியாவில் தங்கி 3 ஒருநாள் போட்டிகள் விளையாடும் போது கரோனா வைரஸ் காரணமாக இந்திய வீரர்களுடன் நட்புறவோடு கைகுலுக்குவதைச் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வோம் என்று தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்

இந்திய அணியுடன் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தென் ஆப்பிரிக்க அணி இந்தியா வந்துள்ளது. முதலாவது ஒருநாள் போட்டி வரும் 12-ம் தேதி தர்மசலாவில் தொடங்குகிறது. 2-வது போட்டி 15-ம் தேதி லக்னோவிலும், 3-வது ஆட்டம் 18-ம் தேதி கொல்கத்தாவிலும் நடக்கிறது.

இந்த போட்டித் தொடரில் பங்கேற்பதற்காகத் தென் ஆப்பிரிக்க அணியினர் இன்று டெல்லி வந்தனர். அவர்கள் அங்கிருந்து விமானம் மூலம் தர்மசாலாவுக்குப் புறப்பட்டனர். கரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால், இந்த முறை தென் ஆப்பிரிக்க அணியுடன் தலைமை மருத்துவர் சுயப் மஞ்சராவுடம் உடன் வந்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துவிட்டதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு பல்வேறு அரசு அலுவலகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் ஒருவொருக்கு ஒருவர் கைகுலுக்கிக் கொள்வதற்குப் பதிலாக வணக்கம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் தென் ஆப்பிரிக்கப் பயிற்சியாளர் மார்க் பவுச்சரிடம், கரோனா வைரஸால் இந்திய வீரர்களுடன் கைகுலுக்குவீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், " நாங்கள் தீவிரமாக மருத்துவ அடிப்படை விஷயங்களைப் பின்பற்றுவோம். கரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால், இந்திய வீரர்களுடன் முறைப்படி கைகுலுக்குவதைத் தவிர்ப்பதைச் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வோம்.

அதேசமயம், சுகாதாரக் காரணங்களுக்காக சில கட்டுப்பாடுகளை இருந்தால் அதைச் செய்ய வீரர்கள் கடமைப்பட்டுள்ளார்கள். வீரர்களின் உடல்நலன் முக்கியம் என்பதால், அவர்களின் நலன் கருதி என்ன நடைமுறை கடைப்பிடிக்க வேண்டுமோ அது கடைப்பிடிக்கப்படும்.

எங்கள் அணியின் மருத்துவ ஆலோசகர் இருக்கிறார், அவர் ஏதேனும் மருத்துவம் தொடர்பான கவலைகள் தெரிவித்தால், அவர் அளிக்கும் பரிந்துரைகள் படி நடப்போம். நிச்சயமாக நாங்கள் யாரும் மருத்துவம் அறிந்தவர்கள் இல்லை என்பதால், அணியின் மருத்துவர் குழு சொல்லும் பரிந்துரை அடிப்படையில்தான் நடப்போம்" எனத் தெரிவித்தார்

தென் ஆப்பிரிக்க அணியில் குயின்டன் டீ காக்(கேப்டன்), பவுமா, வான் டர் டூசன், டூ பிளசிஸ், வெரியென், கிளாஸன், டேவிட் மில்லர், ஸ்மட்ஸ், பெலுக்வேயோ, லுங்கி இங்கிடி, லூதோ சிபம்லா, ஹென்ட்ரிக்ஸ், நார்ட்யே, லிண்டே, கேஷவ் மகராஜ், மலான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in