தெ.ஆப்பிரிக்க ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு: யாருக்கெல்லாம் வாய்ப்பு, ஓய்வு?

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இதில் கடந்த 6 மாதங்களாகக் காயத்தால் அணியில் இடம் பெறாமல் இருந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அதேபோல் நியூஸிலாந்து தொடருக்கு முன்பாக காயத்தால் விலகிய ஷிகர் தவண், வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்

எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவின் காலம் முடிந்ததையடுத்து சுனில் ஜோஷி தலைமையிலான தேர்வுக்குழுவினர் இந்த அணியைத் தேர்வு செய்துள்ளனர்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

அதேபோல வேகப்பந்துவீ்ச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, ரோஹித் சர்மா காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாததால், அவர் இந்த தொடரில் இடம் பெறவில்லை. அவர் ஐபிஎல் போட்டியில்தான் விளையாடுவார் எனத் தெரிகிறது.

வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர், ஆல்ரவுண்டர் ஷிவம் துபே ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல நல்ல முடிவாக கேதார் ஜாதவ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சுப்மான் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல, நியூஸிலாந்து ஒருநாள் தொடரில் இடம் பெற்ற பிரித்வி ஷா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ரோஹித் சர்மா இல்லாததால், அவருக்குப் பதிலாக பிரித்வி ஷா, ஷிகர் தவணுடன் சேர்ந்து களமிறங்குவார்.

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உடல்நலம் தேறி, சமீபத்தில் நடந்த டிஒய் பாட்டீல் டி20 தொடரில் 31 பந்துகளில் சதம் அடித்து தேர்வாளர்கள் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

ஷிகர் தவண் வருகையால் மயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாததால், அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். ஆனால், பிரித்விஷா சிறப்பாகச்செயல்பட்டதால், அணிக்குள் வந்துவிட்டார்

முதல் ஒருநாள் ஆட்டம் வரும் 12-ம் தேதி தர்மசலாவில் நடக்கிறது, 2-வது போட்டி லக்னோவில் 15-ம் தேதியும், 18-ம் தேி கொல்கத்தாவில் 3-வது போட்டியும் நடக்கிறது

இந்திய அணி விவரம்:
ஷிகர் தவண், பிரித்வி ஷா, விராட் கோலி(கேப்டன்), கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, நவ்தீப் ஷைனி, சுப்மான் கில்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in