

சேவாக்கின் மாறாத அதிரடி ஆட்டம், சச்சின் பிளாஸ்டர் ஷாட்ஸ் ஆகியவற்றால் மும்பையில் நேற்று நடந்த ஆஸ்எஸ்டபிள்யு சீரிஸ் டி20 போட்டியில் மே.இ.தீவுகள் லெஜென்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா லெஜென்ட்ஸ் அணி வென்றது.
நீண்ட இடைவெளிக்குப்பின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினின் ஸ்டைலான பேட்டிங், சேவாக்கின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் சிலாகித்தனர்.
இதற்குத்தானே இத்தனை நாட்கள் காத்திருந்தோம் என்று சேவாக், சச்சின் ஒவ்வொரு ஷாட் அடிக்கும் போது ரசிகர்கள் கரகோஷம் அரங்கத்தை அதிரவைத்தது. சச்சின், சேவாக் இணைந்து களமிறங்கியதைப் பார்த்து ரசிகர்கள் ட்விட்டரில் புகழ்ந்து வருகின்றனர்
முதலில் ஆடிய மே.இ.தீவுகள் லெஜென்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. 151 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்தியா லெஜென்ட்ஸ் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா லெஜென்ட்ஸ் தரப்பில் அதிரடி வீரர் சேவாக் தனது காட்டடி ஆட்டத்தில் 57 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநாயகனாகவும் சேவாக் தேர்வு செய்யப்பட்டார்.
சச்சின் 7 பவுண்டரிகளுடன் 29 பந்துகளில் 36 ரன்களில் வெளியேறினார்.
சேவாக், சச்சின் பேட்டிங் ஃபார்ம் சிறிதுகூடக் குறையவில்லை. அதிலும் சேவாக்கின் அதிரடி ஆட்டம் இன்னும் மிரள வைக்கிறது. இப்போதுள்ள இந்திய அணியில் சேவாக் மீண்டும் சேர்க்கப்பட்டால்கூட அவரின் வழக்கமான ஃபார்ம் திரும்பிவிடும். இப்போதுள்ள இந்திய அணிக்கு சேவாக்கின் ஆட்டம் மிகப்பெரிய பாடமாகும்.
மே.இ.தீவுகள் லெஜென்ட்ஸ் அணி இன்னும் கூடுதலாக 20 ரன்களை சேர்த்திருந்தால் ஆட்டம் இன்னும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும். சேவாக்கின் அதிரடி ஆட்டத்தை இன்னும் இரு ஓவர்கள் ரசித்திருப்பார்கள்.
மும்பை வான்ஹடே மைதானத்தில் ரோட் சேஃப்டி வோர்ல்ட் சீரிஸ் டி20 போட்டி நேற்று நடந்தது. இந்திய லெஜென்ட்ஸ் அணிக்கு சச்சின் கேப்டனாகவும், மே.இ.தீவுகள் லெஜென்ட்ஸ் அணிக்கு லாரா கேப்டனாகவும் செயல்பட்டனர்.
டாஸ் வென்ற சச்சின் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் சச்சின், சேவாக், யுவராஜ் சிங், முகமது கைப், கோனி, முனாப் படேல், இர்பான் பதான், ஜாகீர் கான், பிரக்யான் ஓஜா, சாய்ராஜ் பகதுலே, டீகே ஆகியோர் இடம் பெற்றனர்.
மே.இ.தீவுகள் தரப்பில், டேரன் கங்கா, லாரா, சந்தர்பால், ஹயாத், ஹூப்பர், ரிக்கார்டோ பொவல், ஜேக்கப்ஸ், பெஸ்ட், பென், கோலின்ஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.
முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் லெஜென்ஸ்ட் அணி 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. டேரன் கங்கா, சந்தர்பால் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடினர். 40 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது மே.இ.தீவுகள் லெஜென்ட்ஸ் அணி. கங்கா 32 ரன்களில் ஜாகீர்கான் பந்துவீச்சில் போல்டாகினார்.
Wow..
Masterclass
Once a God always a God