

வங்கதேசத்துக்கும் ஜிம்பாப்வே அணிக்குமிடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேசம் 3-0 என்று கைப்பற்றி ஜிம்பாப்வேவுக்கு ஒயிட்வாஷ் தோல்வியை அளித்தது.
நேற்றைய பகலிரவு ஆட்டம் கேப்டனாக மஷ்ரபே மோர்டசாவின் கடைசி ஆட்டமாகும். இதில் மோர்டசா 6 ஓவர்கள் வீசி 47 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
ஆனால் நேற்று சில்ஹெட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முக்கிய அம்சமே லிட்டன் தாஸ் அடித்த 143 பந்து 176 ரன்களே. இதிலி லிட்டன் 16 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என மைதானத்தில் பல தீபங்களை ஏற்றினார். தமிம் இக்பால் 7 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 109 பந்துகளில் 128 ரன்கள் எடுத்தார்.
இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்காக 292 ரன்களைச் சேர்த்தனர். மொத்தம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில் 40.5 ஓவர்கள் இவர்களே ஆடிவிட்டனர் அதன் பிறகு 323/3 என்று முடிந்தது வங்கதேசம், டக்வொர்த் முறையில் ஜிம்பாபவேவுக்கு 342 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட அந்த அணி 37.3 ஓவர்களில் 218 ரன்களுக்கு கவிழ்ந்தது. முகமது சயிபுதின் 4 விக்கெட்டுகளைச் சாய்க்க ஆட்ட நாயகன் லிட்டன் தாஸ் ஒரு நாள் போட்டிகளில் வங்கதேசத்துக்கான அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரான 176 ரன்களை எடுத்து சாதனைப் படைத்தார்.
தாஸ் இத்தகைய சாதனையைப் புரிந்ததற்கு ஜிம்பாப்வே பில்டிங்கும் ஒரு காரணம், 3 கேட்ச்களை லிட்டன் தாஸ்க்கு அவர்கள் கோட்டை விட்டனர், 54 ரன்களில் இருந்த போது நாட் அவுட் எல்.பி.தீர்ப்பை ரிவியூ செய்யாமல் பெரும் தவறிழைத்தனர், அது அவுட். ஜிம்பாபவே தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கரில் மும்பா 69 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
ஜிம்பாப்வே விரட்டலைத் தொடர்ந்த போது தொடக்க வீரர் டினாஷே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து மஷ்ரபே பந்தில் வெளியேறினார். ஆனால் சபக்வா (34), கேப்டன் ஷான் வில்லியம்ஸ் (30), வெஸ்லி மதேவெரே (42), சிகந்தர் ரஸா (61) ஆகியோர் ஓரளவுக்குச் சிறப்பாக ஆடினாலும் இமாலய இலக்கை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. ஒயிட் வாஷ் வாங்கியது.
தொடர்நாயகர்களாக தமிம் இக்பால், லிட்டன் தாஸ் தேர்வு செய்யப்பட்டனர்.