

இலங்கையின் பல்லெகிலேயில் நேற்று நடைபெற்ற 2வதும், இறுதியுமான டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி டி20 தொடரில் 2-0 என்று இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156/6 என்று முடிய தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி காட்டடி மன்னன் ஆந்த்ரே ரஸலின் ஈவு இரக்கமற்ற அடியினால் 17 ஓவர்களில் 158/3 என்று வெற்றி பெற்றது, இதில் 6 சிக்சர்களுடன் 14 பந்துகளில் 40 ரன்களை விளாசித் தள்ளினார் ரஸல்.
இலங்கையின் அனுபவசாலி கேப்டன் மலிங்கா 3 ஓவர்களில் 2 பவுண்டரிகள் 4 சிச்கர்கள் 3 வைடுகள் என்று சொதப்பி 46 ரன்களை வாரி வழங்கினார்.
முதலில் பேட் செய்த இலங்கையின் முன்னேற்றத்தை வெஸ்ட் இண்டீஸின் அபாரமான ஏமாற்றுப் பந்து வீச்சு தடுத்தது. டாப் 5 வீரர்களில் ஒருவர்ம் 25 ரன்களையே எட்டவில்லை. ஷனகா மட்டுமே அதிகபட்சமாக 31 ரன்களை எட்டினார். அவிஷ்கா பெர்னாண்டோ ஒஷேன் தாமஸ் பந்தில் பவுல்டு ஆனார். பேபியன் ஆலன் பந்தை கட் ஆட முயன்று பாயிண்டில் கேட்ச் ஆனார் குசல் பெரேரா. ஷெஹன் ஜெயசூரியா மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார். குசல் மெண்டிஸ் பிளிக் ஷாட்டில் டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்தார்.
கடைசியில் திசர பெரேரா, ஷனகா கூட்டணி மூலம் மரியாதைக்குரிய ஒரு ரன் எண்ணிக்கையை இலங்கை எட்டியது. மே.இ.தீவுகள் தரப்பில் அனைவரும் சிக்கனமாக வீசினர் ஆலன் 2 விக்கெட்டுகளை கைப்பற்ற, காட்ரெல், தாமஸ், டிவைன் பிராவோ தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
156 ரன்கள் இலக்கை வைத்துக் கொண்டு இந்த காட்டடி மே.இ.தீவுகளைக் கட்டுப்படுத்துவது கடினம். சிம்மன்ஸ் 9 ரன்களில் மேத்யூசிடம் பவுல்டு ஆனாலும் பவர் ப்ளேயில் பி.ஏ. கிங் (43), ஹெட்மையர் (43) இணைந்து ஓவருக்கு10 ரன்கள் வீதம் 61 ரன்களை எட்டினர். பவர் ப்ளேயின் கடைசி ஓவரில் மலிங்கா கிங்கிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார் ஒரு பவுண்டரி, பிறகு லெக் திசையில் 2 மிகப்பெரிய சிக்சர்கள் என்று 19 ரன்கள் அந்த ஓவரில் வந்தது. கிங் 21 பந்துகளில் 43 என்று விளாசி விட்டு பெவிலியன் திரும்பினார்.
ஆந்த்ரே ரஸல் 13வது ஓவரில் கிரீசுக்கு வந்தார், அவர் வந்த நேரம் இலங்கையின் கெட்ட நேரம். மே.இ.தீவுகள் வெற்றிக்கு 44 பந்துகளில் 53 தேவை. 14 பந்துகளில் 40 ரன்கள், தரையில் ஆட மாட்டேன் என்று அடம்பிடித்தார் ரஸல், 6 சிக்சர்கள், ஸ்ட்ரைக் ரேட் 286.71. அதுவும் திசர பெரேராவை அடித்த சிக்ஸர் பந்து கீழே இறங்கியதா அல்லது வான்வெளியில் கலந்து விட்டதா என்று தெரியாத அளவுக்கு உயரே பறந்து காணாமல் போனது. இலங்கை ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா காயமடைந்ததும் இலங்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மே.இ.தீவுகள் 2-0 என்று கைப்பற்றியது.
ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டுமே ஆந்த்ரே ரஸல்தான்.