

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 2-வது கட்ட அரை இறுதியில் இன்று இரவு மர்கோவா நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் கோவா அணியுடன் மோதுகிறது சென்னையின் எப்சி.
சொந்த மைதானத்தில் நடைபெற்ற முதல்கட்ட அரை இறுதி ஆட்டத்தில் சென்னையின் எப்சி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் சென்னையின் எப்சி அணியானது 3 கோல்கள் முன்னிலையுடன் 2-வது கட்ட அரை இறுதி ஆட்டத்தை சந்திக்கிறது.
இன்றைய ஆட்டத்தை சென்னையின் எப்சி டிரா செய்தாலோ அல்லது 2 கோல்கள் வித்தியாசத்தை தாண்டாமல் தோல்வியடைந்தாலோ கூட எளிதாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். நெரிஜஸ் வால்ஸ்கிஸ், ரஃபேல் கிரிவெல்லாரோ மற்றும் ஆண்ட்ரே ஸ்கெம்ப்ரி ஆகியோர் மீண்டும் ஒரு முறை கோவா அணிக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.
கோவா அணியை பொறுத்த வரையில் குறைந்தது 4 கோல்கள் அடிக்க வேண்டும், அதேவேளையில் சென்னை அணியை ஒரு கோல் கூட அடிக்க முடியாதவாறு தடுக்க வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்குகிறது. சொந்த காரணங்களுக்காக கடந்த ஆட்டத்தில் விளையாடாத நட்சத்திர வீரரான பெடியா அணிக்கு திரும்பி உள்ளது கூடுதல் வலுசேர்க்கக்கூடும்.
மேலும் காயத்தில் இருந்து பிரண்டன் பெர்னாண்டஸ், ஹ்யூகோ போமஸ் ஆகியோர் குணமடைந்துள்ளதும் கோவா அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. ஹ்யூகோ போமஸ் இந்த சீசனில் 14 ஆட்டங்களில் 10 கோல்களை அடித்துள்ளார். மேலும் 11 கோல்கள் அடிக்க உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.