Published : 06 Mar 2020 05:28 PM
Last Updated : 06 Mar 2020 05:28 PM

வெறுமனே கிரீசில் நிற்கிறேன் என்றால் ‘செக்யூரிட்டி கார்டு’ போதுமே: ரஹானே அணுகுமுறை மீது வாசிம் ஜாஃபர் பாய்ச்சல் 

நடந்து முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஒயிட் வாஷ் வாங்கியதற்குக் காரணம் இந்திய அணியின் கொண்டாடப்பட்ட பேட்டிங் வரிசையின் சொதப்பல்களுடன் கொண்டாடப்பட்ட பந்து வீச்சு வரிசை எந்த ஒரு புரிதலும் இல்லாமல் ஏனோதானோவென்று வீசியதுதான்.

இந்நிலையில் விராட் கோலி, ரஹானே உள்ளிட்டோரின் பேட்டிங் டெக்னிக் குறித்து முன்னாள் வீரர்களிடமிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா 123 பந்துகளில் வெறும் 22 ரன்களையே எடுத்தார், ஆனால் இரண்டாவது டெஸ்டில் கொஞ்சம் பாசிட்டிவ் ஆக ஆடி தளர்வான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பி அரைசதம் கண்டார்.

ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரஹானேவின் பேட்டிங் சுத்த மோசமாக அமைந்தது, மொத்தமே 16 ரன்கள்தான் எடுத்தார், அதுவும் இரண்டாவது இன்னிங்சில் 42 பந்துகளில் 9 ரன்கள் எடுப்பதற்குள் ஹெல்மெட்டில் அடியெல்லாம் வாங்கி நீல் வாக்னரிடம் டான்ஸ் ஆடி மொத்தமாகச் சொதப்பியதைத்தான் பார்த்தோம்.

இந்நிலையில் சந்தீப் பாட்டீல், ஷார்ட் பிட்ச் பந்துகளை அவர்கள் கிரீன் டாப் பிட்சில் வீசுகின்றனர் அதனை ஆடாமல் விடுத்து பொறுமையும் தைரியத்துடனும் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

ஆனால் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கொஞ்சம் கடுமையாகக் கூறும்போது, “ரஹானே சில வேளைகளில் மிகவும் தடுப்பாட்ட உத்திகளில் மறைந்து கொள்கிறார். அவர் பாசிட்டிவ் ஆக அடித்து ஆடி ரன் எடுக்க முயலும் போதுதான் சரியாக ஆடுகிறார் என்பதே என் கணிப்பு.

சில வேளைகளில் ரன் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட தடுப்பாட்டத்தை ஆடுகிறார். பவுலர்களுக்கு மேலதிகமாக மரியாதை கொடுக்கிறார். ஐபிஎல்-ல் 100 எடுப்பவர் இப்படி ஆடலாமா?

அவருக்கு வரவர தான் தோல்வியடைந்து விடுவோம், ஆட்டமிழந்து விடுவோம் என்ற பயம் அதிகம் இருப்பதாக கேள்விப்பட்டேன், இந்திய அணியை வழிநடத்தியுள்ளார், வெளிநாடுகளில் நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளார். குறைந்த ஓவர் கிரிக்கெட் அணியில் அவரை இந்தியா தேர்வு செய்வதில்லை என்பதால் அவர் தான் ஒரு டெஸ்ட் பிளேயர், பொறுமையும் நிதானத்தையும் நல்ல உத்தியுடன் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடுகிறார்.

தான் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்பதற்காக எதையோ நிரூபிக்கப் பார்க்கிறார்.அதாவது தான் டெகினிக்கலாக மிகச்சரியாக ஆடுகிறேன் என்று காட்டப்பார்க்கிறார். நான் கிரீசில் நிலையாக நிற்பேன் என்று நினைக்கிறார், நிலையாக நிற்பது மட்டுமே போதுமென்றால் அந்தப் பணிக்கு செக்யூரிட்டி கார்டு போதுமே. யார் ரன்களை அடிப்பது? அதற்காக பந்தின் மீது மட்டையை வீச வேண்டும் என்று கூறவில்லை. ஏகப்பட்ட நூறுகள் நம் பின்னால் இருக்கும் போது எதற்காக இப்படி ஆட வேண்டும்? என்னைப்போன்ற சாதாரண வீரரே அயல்நாட்டில் என்னைத் தக்க வைக்க முடிந்தது, இவர்களெல்லாம் சாம்பியன் பேட்ஸ்மென்கள் என்பதை அவர்களே மறக்கக் கூடாது” என்று கூறினார் வாசிம் ஜாஃபர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x