Last Updated : 19 Aug, 2015 04:02 PM

 

Published : 19 Aug 2015 04:02 PM
Last Updated : 19 Aug 2015 04:02 PM

கிங்ஸ் லெவன் வீரர்கள் சூதாட்டம்: பத்திரிகை செய்திகளை கடுமையாக மறுத்த பிரீத்தி ஜிந்தா

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிங்ஸ் லெவன் வீரர்களை அணியின் சக உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா கடுமையாக கண்டித்ததாக வெளிவந்த பத்திரிகை செய்திகள் குறித்து அவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி பிசிசிஐ பணிக்குழு கூட்டத்தில் கிங்ஸ் லெவன் வீரர்களில் சிலர் அணியைத் தோற்கடிக்கும் சூதாட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசியதாக ஊடகங்களில் சில பிரிவினர் செய்தி வெளியிட்டனர்.

அதாவது ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் வீரர்கள் சிலர் அணியை சூதாட்டப் பணத்துக்காக தோற்கடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டதாகவும் அவர்களை பிரீத்தி ஜிந்தா கண்டித்ததாகவும், அதனை பிசிசிஐ கூட்டத்தில் ஜிந்தா தெரிவித்ததாகவும், ஐபிஎல் ஊழல் தடுப்பு அமைப்பினால் இதனை தடுக்க முடியவில்லை என்று அவர் கூறியதாகவும் சில ஊடகங்கள் மேலும் தங்கள் செய்தியில் தெரிவித்திருந்தன.

இது குறித்து பிரீத்தி ஜிந்தா தனது ட்விட்டரில் கூறும்போது, “இந்தச் செய்தி மிகவும் தவறு. அவதூறு, பொறுப்பற்ற எழுத்து” என்றும் இந்தச் செய்தி வெளியான பத்திரிகை பெயரைக் குறிப்பிட்டு, "தவறான தகவல்களால் அதிர்ச்சியுற்றேன். இது பொறுப்பற்ற எழுத்து. இது போன்ற குப்பைகளை வெளியிடுவதை நிறுத்துங்கள்” என்று கடுமையாக சாடியிருந்தார்.

மேலும் பிசிசிஐ கூட்டத்தில் தான் கூறியது என்ன என்பதையும் வெளியிட்டிருந்தார். "வீரர்களிடம் உண்மை அறியும் சோதனை முறை கொண்டு வர வேண்டும், எனவே எந்த ஒரு வீரரும் மேட்ச்-பிக்சிங் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. வருமுன் காப்பதே சிறந்தது." என்று ட்வீட் செய்திருந்தார்.

மேலும், "ஆட்டத்தை தூய்மை படுத்த ஒரு ஆக்கபூர்வமான உரையாடல் மேற்கொண்டதை பரபரப்புக்காக முற்றிலும் சேதப்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுகின்றனர்" என்றும் தனது ட்விட்டர் பகக்த்தில் அவர் சாடியுள்ளார்.

பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூரும் பிரீத்தி ஜிந்தாவுடன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி போன்ற உரையாடல் எதுவும் நடைபெறவில்லை என்று மறுத்துள்ளார். இதுகுறித்து பிரீத்தி ஜிந்தாவின் எதிர்வினை சரியே என்று கூறியுள்ளார் அனுராக் தாக்கூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x