

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிர் கிரிக்கெட் டி20 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முதல் முதலாக தகுதி பெற்றது. சிட்னியில் இன்று இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இதனையடுத்து குரூப் ஸ்டேஜில் 8 புள்ளிகள் பெற்ற இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்குள் முதன் முதலாக நுழைந்துள்ளது. இங்கிலாந்து 6 புள்ளிகளுடன் வெளியேறியது.
அரையிறுதி ரிசர்வ் டே இல்லை என்று ஐசிசி அறிவித்ததையடுத்து இந்திய அணி அதிக புள்ளிகளுடன் இறுதிக்குத் தகுதி பெற்றது. மேலும் இந்திய அணி இந்த டி20 உலகக்கோப்பையில் இதுவரை தோல்வியைச் சந்திக்கவில்லை.
இன்னொரு அரையிறுதி தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது, இதில் வெற்றி பெறும் அணி இந்திய மகளிர் அணியுடன் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் மோதும்.
இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மாவின் அசாத்திய பேட்டிங், இவரும் ஸ்மிருதி மந்தனாவும் அளித்த தொடக்கம், பூனம் யாதவ்வின் அபாரமான ஸ்பின் பவுலிங் ஆகியவை ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற அணிகளை த்ரில் போட்டிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த அரையிறுதி இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் மழை கெடுத்து விட்டது, இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முதலாக டி20 உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றதையும் ரசிகர்களும் அணியினரும் கொண்டாடி வருகின்றனர்.