

பால்டேம்பரிங் சர்ச்சைக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி மறுக்கட்டமைப்புக் காலக்கட்டத்திலிருந்து தற்போது டெஸ்ட் போட்டிகளில் டிம் பெய்ன் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
ஆனால் மைக்கேல் கிளார்க் திடீரென அடுத்த ஆஸ்திரேலியா கேப்டனாக பாட் கமின்ஸ்தான் வர வேண்டும் என்று திடீரென குறிப்பிட்டது அங்கு கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 வடிவங்களுக்கும் வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ்தான் கேப்டனாக வேண்டும் என்று கூறும் மைக்கேல் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித் இதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
“இந்த நாட்டில் சிறந்த வீரர்தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்ற உணர்வு இருந்து வருகிறது. இதை நான் ஏற்கவில்லை, சிறந்த கேப்டன் நோக்கு உள்ளவர்தான் கேப்டனாக வேண்டும். ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மென் ஆனால் அவர் கேப்டனாக சரியான நபர்தான் என்பதை நான் ஏற்கவில்லை.
பவுலர்களை கேப்டனாகப் போட்டால் அவர் காயமடைந்து விடுவார் என்ற பார்வை இருந்து வருகிறது. ஆனால் பாட் கமின்ஸ் இப்போது தன் உடல்தகுதியை பிரமாதமாகப் பராமரித்து வருகிறார். அனைத்து வடிவங்களிலும் ஆடுகிறார், அவர் உடலும் இதற்கு முதிர்ச்சியடைந்துள்ளது. பேட்ஸ்மென் எப்படி களத்தில் நிற்கிறார்களோ அதே போல் பாட் கமின்ஸும் களத்தில் நிற்கக் கூடியவர், எனவே 3 வடிவங்களுக்கும் அவரையே கேப்டனாக நான் தேர்வு செய்வேன்.
ஒரு கேப்டன் எப்படி ஆட்டத்தை அணுகுகிறாரோ அப்படித்தான் பாட் கமின்ஸ் அணுகுகிறார்.
டிம் பெயன் சரியாகவே செயல்படுகிறார், அவர் ஓய்வு அறிவிக்கும் வரை அவரே கேப்டனாக நீடிக்கத் தகுதியானவர்தான் ஆனால் ஸ்மித் பெயர் பின்னால் அந்தக் கரை உள்ளதே அதனால்தான் அவர் சரிவர மாட்டார் என்கிறேன்.
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் ட்ராபியை டிம் பெய்ன் தன் தலைமையில் வென்றால் அது அவர் தலை நிமிர்வுடன் பிரியாவிடை அளிக்கச் சரியான தருணமாக அமையும்” என்றார் மைக்கேல் கிளார்க்.