அடுத்தக் கட்ட வேகப்பந்து வீச்சாளர்களை நோக்கி இந்திய அணி நகர வேண்டும்: கேப்டன் விராட் கோலி திட்டவட்டம்

அடுத்தக் கட்ட வேகப்பந்து வீச்சாளர்களை நோக்கி இந்திய அணி நகர வேண்டும்: கேப்டன் விராட் கோலி திட்டவட்டம்
Updated on
1 min read

ஜஸ்பிரித் பும்ரா கூடிய விரைவில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு தலைமை தாங்குவார் என்று கூறிய விராட் கோலி, இஷாந்த் சர்மாவுக்கு வயது 32, உமேஷ் யாதவ்வுக்கு வயது 33, ஷமி ஆகியோர் ஏற்கெனவே தங்கள் உச்சத்தில் இருக்கின்றனர், எனவே அடுத்தக்கட்ட வேகப்பந்து வீச்சாளர்களை நோக்கி நகர வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

“இப்போதிருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. எனவே இதனை தீவிரமாகப் பரிசீலித்து, இதுதான் சூழ்நிலை என்பதை ஏற்றுக் கொண்டு இவர்களுக்கு மாற்று வேகப்பந்து வீச்சாளர்களை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும்.

இவர்களில் திடீரென இருவர் டெஸ்ட்களில், ஒருநாள், டி20களில் ஆட முடியாமல் போகும் போது இவர்களின் தரத்துக்குரிய புதிய 2-3 வீச்சாளர்கள் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் இதில் வெற்றிடம் உருவாவதை நான் விரும்பவில்லை.

ஏனெனில் நிறைய கிரிக்கெட் தொடர்கள் இருக்கும் போது, இருக்கும் பவுலர்களையே கசக்கிப் பிழிய முடியாது. கிரிக்கெட்டில் மாற்ற நிலை எப்போதும் ஏற்படும். அடுத்த கட்டத்துக்கு நகரும் இடைப்பட்ட காலம் எப்போது ஏற்படும், இதனை நன்கு அறிந்து செயல்படுவது அவசியம். வீரர்களை கசக்கிப் பிழிந்து அவர்கள் உயிரை வாங்க முடியாது. எனவே அவர்களால் முடியவில்லை எனில் இன்னொரு ஜதை வீரர்கள் அவசியம்.

நவ்தீப் சைனி தற்போது உருவாகிவிட்டார், தயாராக இருக்கிறார், இன்னும் 2-3 பவுலர்களை கூடுதலாக சேர்க்கப் பார்த்து வருகிறோம். ஆனால் இதில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும், சமீபத்திய வெற்றியெல்லாம் பவுலர்கள் மூலம்தான் கிடைத்துள்ளது. எனவே தரநிலைகள் பராமரிக்கப்பட வேண்டும், இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

உமேஷ் உட்பட இஷாந்த், ஷமி ஆகியோர் ஆற்றிய பந்து வீச்சு பணிகளின் தரநிலைகளுக்கு ஏற்ப அடுத்த பவுலர்கள் அமைய வேண்டும்” என்றார் விராட் கோலி.

அவர் திடீரென ஏன் இப்படிப் பேசினார் என்பது புரியவில்லை ஆனால் அடுத்த டெஸ்ட் அழைப்புக்காக காத்திருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஹைதராபாத்தின் முகமது சிராஜ், கேரளாவின் சந்தீப் வாரியர், மத்தியப் பிரதேசத்தின் ஆவேஷ் கான், பெங்காலின் இஷான் போரெல் ஆகியோர் இருக்கின்றனர்.

இதே போல் பேட்டிங்கில் மிடில் ஆர்டர் குறித்தும் கோலி கொஞ்சம் கவலைப்பட்டால் நல்லது என்று தோன்றுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in