

நியூஸிலாந்து தொடர் மட்டுமல்ல அதற்கு முந்தைய தொடர்களிருந்தே மூன்று வடிவங்களிலும் சரியான ஃபார்மில் இல்லாத விராட் கோலி தனது 30வது வயதைக் கடந்துள்ளார். இருக்கிறார் எனவே இந்த நேரம் மிக முக்கியமானது, கூடுதல் பயிற்சி எடுக்கவில்லையெனில் சிக்கல்தான் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுரை வழங்கியுள்ளார்.
ராகுல் திராவிட் அடிக்கடி பவுல்டு ஆகத் தொடங்கிய பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்தார், அவர் அப்போது கூறும்போது, “ஒரு பேட்ஸ்மென் அடிக்கை பவுல்டு, எல்.பி.ஆகிறார் என்றால் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது என்றே அர்த்தம்” என்று திராவிட் தன் ஓய்வு முடிவு குறித்து தெரிவித்தது நினைவிருக்கலாம்.
ஏபிபி செய்திகாக கபில் கூறியதாவது, “ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது, 30 வயதைக் கடந்த நிலையில் கண்பார்வை கொஞ்சம் மாறுபட்டிருக்கும். ஸ்விங் ஆகும் பந்துகளை பிளிக் ஆடி பவுண்டரிக்கு விரட்டும் திறமை படைத்த விராட் கோலி தற்போது எல்.பி.ஆகிறார் என்றால் அவரது கண்பார்வையை அவர் கொஞ்சம் சரி செய்து கொள்ள வேண்டும்.
பெரிய வீரர்கள் உள்ளே வரும் பந்துகளுக்கு அடிக்கடி பவுல்டு, எல்.பி. ஆகத் தொடங்கி விட்டார்கள் என்றால் அவர்கள் இன்னும் கூடுதல் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட வேண்டும்.
18 வயது முதல் 24 வயது வரை பார்வை நல்ல நிலையில் இருக்கும், அதன் பிறகு அதை எப்படி நாம் பராமரிக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும்.
சேவாக், திராவிட், விவியன் ரிச்சர்ட்ஸ் போன்றோர்களுக்கே இந்தப் பிரச்சனை அவர்கள் கிரிக்கெட் வாழ்வில் ஏற்பட்டுள்ளது. எனவே கோலி இன்னும் கூடுதலாக பேட்டிங் பயிற்சி செய்ய வேண்டும்.
கண்பார்வை பலவீனம் அடையும் போது டெக்னிக்கை இன்னும் கொஞ்சம் கச்சிதமாக்கி கொள்வது அவசியம். முன்பெல்லாம் அவர் சரியாகக் கணித்து விரைவில் மட்டையை இறக்கி அடித்து ஆடும் பந்துகளுக்கெல்லாம் இப்போது கோலி தாமதமாக வினையாற்றுகிறார்.
ஐபிஎல் நிச்சயம் இந்த விதத்தில் அவருக்கு உதவும். அவர் ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் வீரர், அவருக்கே இதெல்லாம் புரியும். எனவே அவரே சரி செய்து கொள்வார்.” என்றார்.
இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சந்திக்கிறது, முதல் போட்டி தரம்சலாவில் மார்ச் 12ம் தேதி தொடங்குகிறது.