இந்திய அணி கூடுதலாக 50 ரன்களை எடுத்திருந்தால் சிக்கல்தான் : கேன் வில்லியம்சன் ஒப்புதல்

இந்திய அணி கூடுதலாக 50 ரன்களை எடுத்திருந்தால் சிக்கல்தான் : கேன் வில்லியம்சன் ஒப்புதல்
Updated on
1 min read

கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூஸிலாந்து அணி இந்திய அணியை 2வது இன்னிங்சில் 124 ரன்களுக்குச் சுருட்டியது.

132 ரன்கள் வெற்றி இலக்குடன் இறங்கிய நியூஸிலாந்து அணி முதல் விக்கெட்டுக்காக பிளண்டெல், லேதம் சதக்கூட்டணி அமைத்த பிறகு பும்ராவிடம் 2 விக்கெட்டுகளை சடுதியில் இழந்தது. லேதம் உமேஷ் பந்தில் எல்.பி.ஆக, கேன்வில்லியம்சனுக்கு இன் கட்டர் பவுன்சர் ஒன்றை பும்ரா வீச வில்லியம்சன் ஒதுங்க முயல பந்து தானாகவே கிளவ்வில் பட்டு கேட்ச் ஆன பந்தும், பிளண்டெலுக்கு பும்ரா வீசிய இன்ஸ்விங்கரில் அவர் பவுல்டு ஆனதும் இன்னும் 50 ரன்கள் இருந்திருந்தால் நியூஸிலாந்தை இன்னும் கொஞ்சம் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கலாமோ என்றுதான் தோன்றியது.

இதே கருத்தைத்தான் கேன் வில்லியசனும் இப்போது கூறுகிறார், “நியூஸிலாந்தின் ஆட்டம் தனித்துவமான ஆட்டம், ஆட்டத்தின் முடிவு நமக்குச் சாதகமாக இருந்தாலும் சவாலாகவே இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. இந்தியப் பார்வையிலிருந்து இன்னும் 50 ரன்களைக் கூடுதலாக இந்திய அணி எடுத்திருந்தால் நிச்சயம் சிக்கலாகியிருக்கும் ஆட்டம் ஒருதலைப்பட்சமாக இல்லாமல் சவாலாக மாறியிருக்கும்.

இரு டெஸ்ட் போட்டிகளுமே மட்டையாளர்கள், பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் சம அளவு சாதகத்தையே வழங்கியது, ரன்கள் எடுப்பது சிரமமாக இருந்தாலும், அதிர்ஷ்டம் இருந்தால் நம் வழியில் ஆட்டத்தைக் கொண்டு சென்று பவுலர்களுக்கு இன்னும் கூடுதல் நெருக்கடியை அளித்திருக்க முடியும். 2 ஆட்டங்களிலுமே பிரமாதமாக ஆடினோம்” என்றார் வில்லியம்சன்.

ஐசிசி தரவரிசையில் 2ம் இடத்துக்கு முன்னேறிய நியூசிலாந்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 180 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in