Published : 02 Mar 2020 09:33 AM
Last Updated : 02 Mar 2020 09:33 AM

3 நாட்களுக்குள் கதை முடிந்தது: இந்தியாவுக்கு மீண்டுமொரு ஒயிட்வாஷ்; - நியூஸி.யை 2-வது இடத்துக்குக் கொண்டு வந்த இந்தியா 

ஒரே தொடரில் மூன்று ஒயிட்வாஷ், இதில் டி20யில் இந்தியா 5-0 என்று வெற்றி பெற்றதோடு சரி, பிறகு ஒருநாள் 3-0 ஒயிட்வாஷ், டெஸ்ட் போட்டிகளில் 2-0 ஒயிட்வாஷ் கொடுத்தது நியூஸிலாந்து அணி நம்பர் 1 இந்திய அணிக்கு. கிட்டத்தட்ட இரண்டரை நாட்களில் டெஸ்ட் முடிந்துள்ளது. நம்பர் 1 இந்திய அணியின் மிகப்பெரிய தொடர் உதையாக இது அமைந்தது.

இன்று மீதமுள்ள 4 இந்திய விக்கெட்டுகளை 45 நிமிடங்களில் காலி செய்த நியூஸிலாந்து பிறகு டாம் லேதம் (52), பிளண்டெல் (55), சதக்கூட்டணி அமைக்க வெற்றிக்குத் தேவையான இலக்கான 132 ரன்களை 3 விக்கெட்டுகளை இழந்து வென்றது நியூஸிலாந்து, 120 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெற்றது. ஐசிசி தரவரிசையில் 2ம் இடத்தைப் பெற்றது. நியூசிலாந்து மட்டுமே ஒரே அணி இந்தியா தன் நம்பர் 1 இடத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் என்றார் விராட் கோலி, அந்த முயற்சியில் அந்த அணியை 2ம் இடத்துக்குக் கொண்டு வந்து விட்டுள்ளார்.

இந்திய அணி தன் 2வது இன்னிங்சில் 124 ரன்களுக்கு இழந்தது. இந்திய அணிக்கு ஒரே ஆறுதல் பும்ரா 2வது இன்னிங்சிலும் அபாரமாக வீசி கேன் வில்லியம்சனை பவுன்சரில் வீழ்த்தியதும் பிறகு பிளண்டெலுக்கு அபாரமான இன் கட்டர் வீசி பவுல்டு செய்ததுமே. மெதுவே தன் பழைய பவுலிங்கிற்கு அவர் திரும்பி வருவது நல்லது. ஆனால் இப்போதைக்கு டெஸ்ட் போட்டிகள் இல்லை. ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா தொடர், இந்த முறை இந்திய அணிக்கு அவ்வளவு சுலபமல்ல. 2வது இன்னிங்சில் முகமது ஷமி 3 ஒவர்களையே வீச முடிந்தது, அவர் காயமடைந்துள்ளார். ஐபிஎல் வேறு வருகிறதல்லவா? இவர் காயத்துக்குக் காரணம் டிம் சவுத்தி பவுன்சர் ஷமி தோள்பட்டையைப் பதம் பார்த்ததே.

இன்று காலை ஹனுமா விஹாரி (9), சவுத்தி வீசிய ஆபத்தில்லாத லெக் ஸ்டம்புக்கு வெளியே தன் வழியில் சென்று கொண்டிருந்த பந்தை தொட்டு வாட்லிங்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்த மாதிரி சமயங்களில்தான் எதிரணி பவுலர்களை அச்சுறுத்தும் ஒரு டி20 ரக இன்னிங்சை ரிஷப் பந்த் ஆடியிருக்க வேண்டும், ஆனால் தனது பலவீனமான உத்தியுடன் அவர் தடுப்பாட்டம் ஆடுகிறேன் பேர்வழி என்று ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தையெல்லாம் மட்டையைத் தொங்கவிட்டார். இதைப் பார்த்த ட்ரெண்ட் போல்ட் சும்மா இருப்பாரா, ஒரு பந்தை அதே இடத்தில் வீச ரிஷப் பந்த் எட்ஜ் செய்து 4 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். சமய, சந்தர்ப்பம் புரியாத ஒரு இன்னிங்ஸ், ரவிசாஸ்திரி, விக்ரம் ராத்தோர், விராட் கோலி என்ன செய்து கொண்டிருந்தனர்? இவரை அடித்து ஆடச்சொல்லியிருந்தால் இன்னும் 30 ரன்கள் கூட எடுத்திருக்கலாம்.

ஷமி மிகச்சரியாக ஸ்லாக்கில் இறங்கினார், ஆனால் அவரது ஷாட்டுக்கு லெக் திசையில் பீல்டரை சரியாக நிறுத்த சவுத்தியிடம் 5 ரன்களில் வெளியேறினார். ஆட்டத்தின் போக்குக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா மிகப்பிரமாதமாக போல்ட்டை ஒரு நேர் சிக்ஸ் அடித்தார். பும்ரா 4 ரன்களில் ரன் அவுட் ஆக, ஜடேஜா 16 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆனார். இந்திய அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட். சவுத்தி 3 விக்கெட்டுகளையும் போல்ட் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

டாம் லேதம், பிளண்டெல் அசத்தல் பேட்டிங்:

நியூஸிலாந்து 2வது இன்னிங்சைத் தொடங்கிய போது உமேஷ் யாதவ் தளர்வாக வீசி பவுண்டரிகளை வழங்க பும்ரா பந்து வீச்சு அதிக சிரமங்களைக் கொடுத்தது. பிளண்டெலை ஒரு ஓவரில் வீழ்த்தி விடுமாறு வீசினார், இன்சைட் எட்ஜ், பீட்டன் என்று ஆனார். இரு முறை லேதம் பும்ராவிடம் பவுல்டு ஆகியிருப்பார்.

ஆனால் இடையிடையே விழும் ஓவர் பிட்ச், ஷார்ட் பிட்ச் பந்துகளை லேதம், பிளண்டெட்ல் பிரமாதமாக பவுண்டரிக்கு அனுப்பி வந்தனர். குறிப்பாக பிளண்டெல் ஆடிய பேக்ஃபுட் ஷாட்கள் மறக்க முடியாதவையாக இருந்தன, ஒரு முறை ஜடேஜாவை இறங்கி வந்து நேராக சிக்சர் விளாசினார். பேக் ஃபுட் பஞ்ச் பிளண்டெலின் பலமான ஷாட் ஆக அமைந்தது.

டாம் லேதம் இந்தப் போட்டியில் தன் 2வது அரைசதத்தை எடுத்து 52 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். கேன் வில்லியம்சனுக்கு பும்ரா வீசியது உண்மையில் திகைப்பூட்டும் பந்து ஆகும், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி ஆஃப் கட்டர் பவுன்சர் போன்று வர வில்லியன்சன் பின்னால் சாய்ந்து உடலை விலக்கிக் கொண்டார் ஆனால் பந்து அவரது கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனது, 5 ரன்களில் அவர் வெளியேறினார்.

பிளண்டெல் அருமையான சில ஷாட்களுடன் அரைசதம் எடுத்து 55 ரன்களில் பும்ராவின் மிகப்பெரிய இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார், ஆஹா இன்னும் 70-75 ரன்கள் இருந்தால் நியூஸிலாந்தை சுருட்டக் கூட முயன்றிருக்கலாமே என்பது போல் கோலியின் முகபாவம் சென்றது.

கடைசியில் டெய்லர், நிகோல்ஸ் தலா 5 ரன்களுடன் மேலும் சேதம் ஏற்படாமல் ஒயிட்வாஷை உறுதி செய்தனர். ஒரே தொடரில் இந்திய அணிக்கு 2 ஒயிட்வாஷ்கள்.

ஆட்ட நாயகனாக கைல் ஜேமிசன் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக டிம் சவுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x