Last Updated : 01 Mar, 2020 03:34 PM

 

Published : 01 Mar 2020 03:34 PM
Last Updated : 01 Mar 2020 03:34 PM

"பிளான் சக்ஸஸ்; கோலி தவறு செய்து ஆட்டமிழப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கு": வம்பிழுக்கும் டிரன்ட் போல்ட்

விராட் கோலி : கோப்புப்படம்

கிறைஸ்ட்சர்ச்

உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு நெருக்கடி அளித்து அவரை தவறு செய்யவைத்து, ஆட்டமிழந்து செல்வதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருக்கிறது என்று நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் கிண்டல் செய்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைசிறந்த பேட்ஸ்மேன் என்ற போதிலும் நியூஸிலாந்து வந்தபின் எந்த போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் வகையில் விளையாடவில்லை.

நியூஸிலாந்து தொடரில் 4 டி20 போட்டிகளில் 125 ரன்களும், 3 ஒருநாள் போட்டிகளில் சேர்த்து 75 ரன்கள் மட்டுமே கோலி சேர்த்து மொத்தம் 200 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் ஒரு அரை சதம் மட்டுமே அடங்கும். வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்டிலும் 2,19 ரன்கள் என சொல்லிக்கொள்ளும் வகையில் விளையாடவில்லை, கிறைஸ்ட் சர்ச்சில் இன்று தொடங்கிய 2-வது டெஸ்டிலும் கோலி சொற்ப ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.

கிறைஸ்ட்சர்சில் நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் சேர்த்துள்ளது. டிரன்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் தொடர் முழுவதும் விராட் கோலி தவறான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்துள்ளார். அதுகுறித்து நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் கூறுகையில், " மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன், சிறந்த பேட்ஸ்மேன் கோலி என்பதில் சந்தேகமில்லை. இந்தியக் கேப்டன் விராட் கோலியை 20 ரன்களுக்குள் கடந்த 4 இன்னிங்ஸ்களில் நாங்கள் ஆட்டமிழக்கச் செய்திருக்கிறோம்.

டிரன்ட் போல்ட்

எங்கள் அணி திட்டமிட்டபடி விராட் கோலிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதன்படி திட்டமிட்டு விளையாடினோம், விராட் கோலியை எளிதாகத் துரத்திவிட்டோம்.

உண்மையில் விராட் கோலி மிகச்சி்றந்த வீரர்தான், ஆனால் அவருக்குத் தொடர்ந்து அழுத்தங்களையும் நெருக்கடிகளைக் கொடுக்கும் போது அவர் தவறு செய்து ஆட்டமிழந்து செல்வதைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

இந்திய அணியினர் பெரும்பாலும் அவர்கள் நாட்டில் மெதுவான, தாழ்வாகப் பந்து செல்லும்ஆடுகளத்தில் விளையாடி இருப்பார்கள், நியூஸிலாந்து போன்ற ஆடுகளங்களுக்கு அவர்கள் மாறுவதற்கு அதிகமான நேரமாகும். நான் இந்தியா சென்று பந்துவீசினால் அது எனக்கு அன்னிய மைதானமாகவே இருக்கும்.

2-வது டெஸ்டில் 2-ம் நாளான இன்று ஒரே நாளில் இரு அணிகளிலும் சேர்த்து 16 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன. 2-வது நாளில் 16-விக்கெட்டுகள் வீழ்வது டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனையாகவே இருக்கும். பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றார்போல் சாதகமான சூழல் காணப்பட்டது, பந்துகள் ஆடுகளத்தில் நன்றாக எழுந்ததால், காற்றின் வேகமும் இருந்ததால், அதற்குரிய வெகுமதியாக விக்கெட் கிடைத்தது. எங்கள் பந்துவீச்சு மிகவும் திருப்தியாக இருந்தது " எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x