Published : 01 Mar 2020 10:45 AM
Last Updated : 01 Mar 2020 10:45 AM

ஐஎஸ்எல் முதற்கட்ட அரை இறுதியில் கோவாவை வீழ்த்தியது சென்னையின் எப்சி- 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முதற்கட்ட அரை இறுதி ஆட்டத்தில் சென்னையின் எப்சி 4-1 என்ற கோல் கணக்கில் கோவா எப்சி-யை வீழ்த்தியது.

சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 5-வது நிமிடத்தில் சென்னை வீரர் ரஃபேல் கிரிவெல்லாரோவின் கிராஸை பெற்ற லூசியன் கோயன் பாக்ஸின் மையப் பகுதியில் இலக்கை நோக்கி தலையால் முட்டிய பந்து வலது புறம் தடுக்கப்பட்டது. 15-வது நிமிடத்தில் கோவா அணியின் சீமின்லன் டங்கல் தலையால் முட்டி கொடுத்த பாஸை லெனி ரோட்ரிக்ஸ் இலக்கை நோக்கி உதைத்த போது இடது புறம் விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது.

அடுத்த நிமிடத்தில் லூசியன் கோயன் உதவியுடன் பந்தை பெற்ற ரஃபேல் கிரிவெல்லாரோ பாக்ஸின் வலது புறத்தில்இருந்து அடித்த பந்து கோல் விழாமல் தடுக்கப்பட்டது. 20-வதுநிமிடத்தில் நேரடி ஃப்ரீ கிக் வாயிலாக ரஃபேல் கிரிவெல்லாரோ அடித்த பந்து கோல் கம்பத்துக்கு மேலாகச் சென்று ஏமாற்றம் அளித்தது.

34-வது நிமிடத்தில் கோவாஅணியின் செரிடன் பெர்னாண்டஸின் கோல் அடிக்கும் முயற்சியும் பலன் இல்லாமல் போனது. முதல் பாதியில் இரு அணிகள் சார்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 2-வது பாதி ஆட்டம் தொடங்கியதும் சென்னையின் எப்சி வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் செயல்பட்டனர்.

54-வது நிமிடத்தில் ரஃபேல் கிரிவெல்லாரோ கார்னரில் இருந்து உதைத்த பந்தை லூசியன் கோயன் தலையால் முட்டி கோல் வலைக்குள் தள்ள சென்னையின் எப்சி 1-0 என முன்னிலை பெற்றது. 61-வது நிமிடத்தில் சென்னையின் எப்சி 2-வது கோலை அடித்தது. இந்தகோலை ஜெர்ரி லால்ரின்சுவாலா உதவியுடன் பந்தை பெற்று அனிருத் தாபா அடித்து அசத்தினார்.

77-வது நிமிடத்தில் கார்னில் இருந்து நெரிஜஸ் வால்ஸ்கிஸ் உதைத்த பந்தை பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து எல்சபியா கோல்கம்பத்தின் வலதுபக்கம் நோக்கி திணிக்க சென்னையின் எப்சி அணியின் முன்னிலை 3-0 என அதிகரித்தது. அடுத்த 2-வது நிமிடத்தில் சென்னையின் எப்சி மேலும் ஒரு கோல் அடிக்க கோவா அணி அதிர்ச்சியில் உறைந்தது.

இந்த கோலை ஜெர்ரி லால்ரின்சுவாலா உதவியுடன் சாங்க்டே அடித்திருந்தார். ஆட்டம் முடிவடைய 5 நிமிடங்கள் இருந்த நிலையில் கோவா அணியின் சேவியர் காமா கோல் அடித்தார். இதன் பின்னர் அந்த அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் சென்னையின் எப்சி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரு அணிகளும் 2-வது கட்டஅரை இறுதி ஆட்டத்தில் வரும்7-ம் தேதி மீண்டும் மோதுகின்றன. இந்த ஆட்டம் கோவாவில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தின் முடிவில் சராசரி கோல்கள் விகிதப்படி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணி தெரிய வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x