Published : 01 Mar 2020 09:56 AM
Last Updated : 01 Mar 2020 09:56 AM

ஷமியின் அட்டகாசமான பவுலிங், கேன் வில்லியம்சனைக் காலி செய்த பும்ரா, ஜடேஜா, கோலியின் அபார கேட்ச்கள்: நியூஸி. 235 ஆல் அவுட்

கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஒன்று திரண்டு எழுந்து நியூஸிலாந்து அணியை 235 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. ஷமியின் அபார ஸ்விங், பும்ராவின் கேன் வில்லியம்சன் விக்கெட், ஜடேஜாவின் ராஸ் டெய்லர் விக்கெட், 2 அற்புத கேட்ச்கள், கோலியின் திகைக்க வைத்த கேட்ச் ஆகியவை ஒன்று சேர நியூஸிலாந்து 172 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

முதல்நாள் ஈரப்பதம் காய்ந்து போக பிட்ச் கொஞ்சம் வேகம் எடுத்தது ஸ்விங்கும் இருந்தது. அடக்கி வைத்திருந்த அசிங்கமான செய்கைகள் விக்கெட் விழ விழ விராட் கோலியிடமிருந்து வெளிப்பட்டன. முதல் அரைமணி நேரம் உமேஷ் யாதவ், பும்ரா கடும் சிக்கல்களைக் கொடுத்தனர், இதில் டாம் பிளெண்டலை மிகப்பிரமாதமான இன்ஸ்விங்கரில் உமேஷ் யாதவ் எல்.பி. செய்ய, வில்லியம்சன் பும்ராவின் வைடு பந்தை பெரிய அளவில் உள்ளே வரும் என்று எதிர்பார்த்தார், ஆனால் அது அவ்வளவாக உள்ளே வராத நிலையில் தடுப்பாட்ட உத்தியில் வெளிவிளிம்பில் பட்டு பந்த்திடம் கேட்ச் ஆனது. பிளண்டெல் 30 ரன்களுக்கும் வில்லியம்சன் கோலி போலவே 3 ரன்களுக்கும் வெளியேறினர்.

முகமட் ஷமி ஷார்ட் பிட்ச்சாகத்தான் வீசினார், ஆனால் ரன்கள் கொடுக்காததால் நீண்ட ஸ்பெல்லில் தன் லெந்த்தை சரி செய்து கொண்டு 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

டாம் லேதம், ராஸ் டெய்லர் முதல் ட்ரிங்க்ஸ் வரை எந்த சேதமும் இல்லாமல் கொண்டு சென்றனர். ரன்களும் வந்து கொண்டிருந்தன 10 ஓவர்களில் 40 சேர்த்தனர். ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சில் பலவீனமான இணைப்பு என்று ஜடேஜாவை அடிக்கப் போனார் பந்து முன் விளிம்பில் பட்டு பாயிண்டில் செல்ல அங்கு உமேஷ் யாதவ் பின்னால் சென்று பிரமாதமான கேட்சை எடுக்க டெய்லர் 15 ரன்களில் வெளியேறினார்.

டாம் லேதம் மிகப்பிரமாதமான அரைசதத்தில் 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் ரிவர்ஸ் ஸ்விங் போடுவேன் என்று அச்சுறுத்தி வந்த ஷமியின் ஒரு பந்தை ஆடாமல் விட முடிவெடுத்தார், ஆனால் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இருந்து நன்றாக ஸ்விங் ஆகி ஸ்டம்பைப் பதம் பார்க்க வெளியேறினார்.

ஹென்றி நிகோல்ஸ் 14 ரன்களில் இருந்த போது ஷமி வீசிய வைடு ஷார்ட் ஆஃப் லெந்த் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை தொட்டதை நினைத்து வருந்தியிருப்பார். கோலி 2வது ஸ்லிப்பில் மிகப்பிரமாதமான டைவிங் கேட்ச் எடுத்தார், ஒரு கோணத்தில் அது நாட் அவுட் போல் தெரிந்தது, இன்னொரு கோணத்தில் சரியானதாக இருந்தது. ஆனால் முடிவாக அது துல்லிய கேட்ச் தானா என்று சொல்ல முடியவில்லை. சந்தேகத்தின் பலனை எப்போதும் பேட்ஸ்மெனுக்குத்தான் வழங்க வேண்டும், ஆனால் இப்போது நடைமுறை மாறிவிட்டது, கேட்ச் பிடித்தது கோலி, அணியின் கேப்டன் எனவே அவுட் கொடுக்காமல் இருக்க முடியுமா. நிகோல்ஸ் வெளியேறினார், சந்தேகத்துடனேயே. உணவு இடைவேளையின் போது 142/5 என்று சென்றது நியூஸிலாந்து.

உணவு இடைவேளைக்குப் பிறகு பும்ராவிடம் வாட்லிங் டக் அவுட் ஆனார். ஜடேஜா பாயிண்டில் பிரமாத கேட்ச் எடுத்தார். இதே ஓவரில் பும்ரா, சவுத்தியையும் காலி செய்தார். இதுவும் பும்ராவின் திறமையினால் வந்ததல்ல ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை தொட்டிருக்க வேண்டியதில்லை தொட்டார் ஆட்டமிழந்தார். கொலின் டி கிராண்ட் ஹோம் 26 ரன்கள் எடுத்தார். ஆனால் ஜடேஜாவின் ஒரு பந்து அபாரமாகத் திரும்ப ஆஃப் ஸ்டம்பை இழந்து பவுல்டு ஆனார்.

கைல் ஜேமிசன் ஒரு பிரமாதமான ஆல்ரவுண்டராக எழுச்சி பெற்று வருகிறார், முதல் டெஸ்ட்டில் ஆடியது போலவே இந்த முறையும் ஆடி இவரும், வாக்னரும் 51ரன்களை 9வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர், கைல் ஜேமிசன் 63 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்தார், நீல் வாக்னர் 21 ரன்களை எடுத்து ஷமி பந்தில் ஜடேஜாவின் அதியற்புத கேட்சுக்கு இரையானார். வாக்னர் ஷாட் சிக்சருக்குச் சென்று கொண்டிருந்தது, ஆனால் டீப் ஸ்கொயர்லெக்கில் ஒரே எம்பு எம்பி இடது கையை மேலே நீட்ட பந்து ஒட்டிக்கொண்டது, வாக்னர் வெளியேற, கடைசி விக்கெட்டாக கைல் ஜேமிசன் ஷமியின் ஷார்ட் பிட்ச் எழுச்சிப் பந்தை புல் ஆட முயன்று டாப் எட்ஜ் செய்ய இதனை பந்த் அருமையாக ஓடிச்சென்று பிடித்தார். நியூஸிலாந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 153/7 லிருந்து மீளவிட்டது இந்திய அணி.

இந்திய தரப்பில் ஷமி 81 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் பும்ரா 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற உமேஷ் யாதவ் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

தற்போது இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது, கோலி 12 ரன்களுடனும் புஜாரா 9 ரன்களுடனும் ஆடிவருகின்றனர். அகர்வால் போல்ட் பந்தில் எல்.பி.ஆக, பிரித்வி ஷா 14 ரன்களில் சவுத்தியின் ஷார்ட் பிட்ச் பவுலிங்குக்கு இரையானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x