

ஷபாலி வர்மாவின் அதிரடியான பேட்டிங், ராதா யாதவின் பந்துவீச்சு ஆகியவற்றால் மெல்போர்னில் இன்று நடந்த உலகக்கோப்பை டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய மகளிர் அணி.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்தது. 114 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 14.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
இந்திய மகளிர் அணி ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளதால், இந்த லீக் ஆட்டம் முறைக்காகவே இருந்தது. இருப்பினும் இந்திய மகளிர் அணியினர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை நோக்கி நகர்ந்துள்ளனர்.
இந்திய அணி சார்பில் அசத்தலாக பேட்டிங் செய்த ஷபாலி வர்மா 34 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 2-வது முறையாக அரை சதத்தை தவறவிட்டார். இந்திய அணி கடந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்கு ஷபாலி வர்மாவின் பேட்டிங் முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்ளிட்ட 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இந்தப்போட்டியில் சிறப்பாகப்பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர் ராதா யாதவ் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கே ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்திலிருந்தே இலங்கை வீராங்கனைகள் விக்கெட்டை பறிகொடுத்து வந்தார்கள். 10 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்த 10 ஓவர்களில் 55 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை இழந்தது.
இலங்கை அணி தரப்பில் கேப்டன் ஜெயங்கனி அதிகபட்சமாக 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் தில்ஹரி 25 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீராங்கனைகள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 75 ரன்களில் இருந்து 80 ரன்களுக்குள் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்தது.
இந்தியத் தரப்பில் அதிகபட்சமாக ராதா யாதவ் 4 விக்கெட்டுகளையும், கெய்க்வாட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்,
114 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா நல்ல தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். இந்த முறையும் மந்தனா 17 ரன்களுடன் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால், விக்கெட் வீழ்ந்தபோதிலும் 16 வயதான ஷபாலி வர்மா அதிரடி ஆட்டம் ஆடி ஸ்கோரை உயர்த்தினார்.
அடுத்து வந்த கேப்டன் கவுர், வர்மாவுக்கு துணை நிற்க ஷபாலி வர்மா பவுண்டரிகளையும், சிஸ்ரையும் அடித்து நொறுக்கினார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கவுர் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அரைசதத்தை நோக்கி முன்னேறிய ஷபாலி வர்மா 47 ரன்னில் வெளியேறினார்.
ரோட்ரிக்ஸ் 15 ரன்னிலும், ஷர்மா 15 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். இந்திய அணி 14.4 ஓவர்களில் 116 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இலங்கை தரப்பில் பிரபோதனி, ஸ்ரீவர்த்தனே தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.