

கோவிட்-19 வைரஸ் பிரச்சினை இருந்தாலும் திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) உறுதி அளித்துள்ளது.
ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் ஜூலை 24-ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சீனாவின் வூஹான் நகரில் கோவிட்-19 வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது சீனா மட்டுமல்லாமல் ஜப்பான், தென் கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவியுள்ளது.
இதனால் ஜப்பானில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து நேற்று முன்தினம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேக் கூறியதாவது:
டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். போட்டியை வெற்றிகரமாக நடத்துவது என ஐஓசி உறுதி பூண்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் ஜப்பானில் பரவியிருந்தாலும் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவது என முடிவு செய்துள்ளோம்.
இதற்காக ஜப்பான் சுகாதாரத்துறை அதிகாரிகள், உலக சுகாதார மையத்தின் (டபிள்யுஎச்ஓ) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
ஜப்பானில் கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே எடுத்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
– பிடிஐ