Published : 29 Feb 2020 06:59 AM
Last Updated : 29 Feb 2020 06:59 AM

வெற்றி பெறுவோம்: பயிற்சியாளர்

எப்சி கோவாவுடனான அரை இறுதிப் போட்டியில் நாங்கள் வெற்றிபெறுவோம் என்று சென்னையின் எப்.சி. அணி பயிற்சியாளர் ஓவன் கோய்லே தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

முதல் அரை இறுதி ஆட்டத்தில் எப்சி கோவா அணியுடன் மோதுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த சீசனில் எப்சி கோவா ஒரு மிகச் சிறந்த அணியாக முன்னேறியுள்ளது. அவர்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. மிகச் சிறப்பான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் சென்னையின் எப்சி அணியும்அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது நாங்களும் நல்ல பார்மில் உள்ளோம்..

வீரர்களுக்கிடையே இருக்கும் நம்பிக்கையும் உறுதியும் நாளை நடைபெறவுள்ளன எப் சி கோவாவுக்கு எதிரான போட்டியில் எங்களை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் என நம்புகிறேன். சென்னை அணி வீரர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் போட்டியை எதிர்கொள்வதால் வெற்றி பெறுவோம்.

இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் தற்காப்பு ஆட்டக்காரர்களும் மிகப்பெரிய பங்கை வகிப்பார்கள். அதேபோல இரு அணிகளின் முன்கள, நடுகள ஆட்டக்காரர்களும் மிகச் சிறந்த வீரர்களாக உள்ளனர்.

முன்கள ஆட்டக்காரர்கள் சிறப்பாக உள்ளதால் அவர்கள் எந்த நேரத்திலும் அணியின் வெற்றிக்கு உதவக்கூடும். நாம் எப்படி தடுப்பாட்டம் ஆடுவது என்பதில்தான் அணியின் வெற்றி தோல்வி அடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எப்சி கோவா அணி பயிற்சியாளர் கிளிப்போர்ட் மிராண்டா கூறும்போது, “பிளே-ஆப் சுற்றில் சென்னைபோன்ற வலுவான அணியுடன் மோதுவது கடினமான விஷயம்தான். பிளே-ஆப் சுற்றில் சென்னை அணியுடன் மோதுவது தவிர்க்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் சென்னை அணியுடன் மோதுவது என்பது இப்போது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மிகச் சிறப்பான அணியாக சென்னை உருவாகியுள்ளது.

கடந்த 8 லீக் ஆட்டங்களி்ல வெல்லமுடியாத அணியாக சென்னை அணி உள்ளது. எனவே இந்த ஆட்டம் எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். ஆனாலும் எங்களது இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x