

புதன்கிழமை தொடங்கும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3-ம் நிலையில் ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக விராட் கோலி களமிறங்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
"புஜாராவைக் காட்டிலும் ரோஹித் சர்மா நல்ல தெரிவுதான், ஆனால் என்னைப் பொறுத்தவரையில் விராட் கோலிதான் 3-ம் நிலையில் களமிறங்க வேண்டும். இப்படித்தான் மற்ற வீரர்களுக்கு அவர் உத்திகளை வகுக்க முடியும்.
தொடரை நல்ல முறையில் தொடங்குவது அவசியம், முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடையாதீர்கள். நடப்பு ஆஷஸ் தொடரிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது அவசியம்.
இதனைக் கூறும்போதே இலங்கை அணிக்கு அழுத்தம் அதிகம் என்பதையும் நான் கூறிவிடுகிறேன், சங்கக்காராவுக்கு ஒரு சிறப்பான வழியனுப்புதலை செய்ய இலங்கை வீரர்கள் முனைப்பு காட்டுவர்.
ஆக்ரோஷமும் கொஞ்சம் எதார்த்த சிந்தனையும் தேவை, இதுதான் இந்திய அணிக்கு முக்கியமானது என்று நான் கருதுகிறேன்” என்றார் சுனில் கவாஸ்கர்.