

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறவிருக்கும் 2 வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் பிரிதிவி ஷா வியாழனன்று கலந்து கொள்ளவில்லை. இடது பாதத்தில் வீக்கம் காரணமாக பிரிதிவி ஷா பங்கேற்கவில்லை என்று அணி நிர்வாகம் தெரிவிக்கிறது.
இந்நிலையில் ஷுப்மன் கில் கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார் என்று தெரிகிறது. இடது பாதம் வீக்கத்துக்குக் காரணம் என்னவென்று தெரியாததால் அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறும் பயிற்சியில் பிரித்வி ஷா பேட்டிங் செய்யும் போது அசவுகரியமாக உணர்ந்தால் 2வது டெஸ்ட் போட்டியில் அவருக்குப் பதிலாக ஷுப்மன் கில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று வலையில் ஷுப்மன் கில் பேட்டிங் செய்தார், இதனால் மயங்க் அகர்வாலுடன் ஷுப்மன் கிள் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது, மேலும் இந்தியா ஏ அணிக்காக கிறைஸ்ட்சர்ச் பவுன்ஸ் பிட்சில் பிரமாதமாக ஆடியுள்ளார் கில்.
வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் பாசிட்டிவாக துவங்கிய ஷா 16 ரன்களில் ஆஃப் வாலி பந்துக்கு காலை நகர்த்தாமல் உடலிலிருந்து தள்ளி மட்டையை நீட்டியதில் பவுல்டு ஆக 2வது இன்னிங்சில் போல்ட்டின் ஷார்ட் பிட்ச் பந்துக்கு இரையானார்.
ஆனால் கேப்டன் விராட் கோலி, ஷா மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார், அவருடைய தினமானால் எந்த பந்து வீச்சையும் அவர் துவம்சம் செய்து விடுவார் என்று நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.