உத்தப்பா, ஷகிப் அதிரடி; ‘பிளே ஆப்’ சுற்றில் கொல்கத்தா- வெளியேறியது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

உத்தப்பா, ஷகிப் அதிரடி; ‘பிளே ஆப்’ சுற்றில் கொல்கத்தா-  வெளியேறியது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
Updated on
2 min read

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸை தோற்கடித்து அடுத்த சுற்றான ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். தொடர்ச்சியாக 6 வெற்றிகளைக் குவித்த கொல்கத்தா 16 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

அதேநேரத்தில் வாழ்வா, சாவா ஆட்டத்தில் விளையாடிய பெங்களூர் அணி இந்த ஆட்டத்தில் தோற்றதன் மூலம் ‘பிளே ஆப்’ சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி, உத்தப்பா, ஷகிப் அல்ஹசன் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணியில் கேப்டன் கம்பீர் பவுண்டரி அடித்த கையோடு முதல் ஓவரிலேயே வெளியேற, பின்னர் வந்த மணீஷ் பாண்டே 13 ரன்களோடு நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய யூசுப் பதான் 13 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 22 ரன்கள் சேர்த்து ரன் அவுட்டாக, 7 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா.

உத்தப்பா-ஷகிப் விளாசல்

இதையடுத்து உத்தப்பாவுடன் இணைந்தார் ஷகிப் அல்ஹசன். இந்த ஜோடி அதிரடியாக ஆட 10 ஓவர்களில் 86 ரன்களை எட்டியது கொல்கத்தா. உத்தப்பா 34 பந்துகளில் அரைசதமடித்தார். சாஹல் வீசிய 15-வது ஓவரை எதிர்கொண்ட ஷகிப் அல்ஹசன் ஒரு பவுண்டரியையும், 3 சிக்ஸர்களையும் விளாச, அந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள் கிடைத்தன. தொடர்ந்து வேகம் காட்டிய அவர், திண்டா பந்துவீச்சில் பவுண்டரி அடித்து 32 புந்துகளில் அரைசதம் கடந்தார்

கொல்கத்தா அணி 18.4 ஓவர்களில் 177 ரன்களை எட்டியபோது ஷகிப் அல்ஹசன் ஆட்டமிழந்தார். 38 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் குவித்த அவர், அஹமது பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.

அல்ஹசன்-உத்தப்பா ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 70 பந்துகளில் 121 ரன்கள் குவித்தது. பின்னர் வந்த டென்தஸ்சாத்தே சிக்ஸரை விளாச, ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரின் கடைசி இரு பந்துகளில் உத்தப்பா இரு பவுண்டரிகளை விளாசினார். இதனால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது கொல்கத்தா.

உத்தப்பா 51 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 83 ரன்களும், தஸ்சாத்தே 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூர் தரப்பில் சாஹல் அதிகபட்சமாக 4 ஓவர்களில் 50 ரன்களை வாரி வழங்கினார்.

கோலி-டக்கவாலே போராட்டம்

195 ரன்கள் என்ற வலுவான இலக்குடன் பேட் செய்த பெங்களூர் அணியில் தொடக்க ஆட்டக்காரர் கெயிலை 6 ரன்களில் வெளியேற்றினார் உமேஷ் யாதவ். இதையடுத்து டக்கவாலேவுடன் இணைந்தார் கோலி. அதிரடியாக ஆடிய இந்த ஜோடி அடுத்த 10.3 ஓவர்களில் 85 ரன்கள் சேர்த்தது. 12-வது ஓவரை வீசிய சுநீல் நரேன், கோலி, டக்கவாலே இருவரையும் வீழ்த்தினார். கோலி 31 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்களும், டக்கவாலே 36 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் வந்த யுவராஜ் சிங் 2 சிக்ஸர்களை விளாசிய நிலையில் 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டிவில்லியர்ஸ் 13 ரன்கள் எடுத்த நிலையில் நரேன் பந்துவீச்சில் போல்டு ஆனார். இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூர். இதனால் கொல்கத்தா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

கொல்கத்தா தரப்பில் சுநீல் நரேன் 4 ஓவர்களில் 20 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உத்தப்பா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

உத்தப்பாவிடம் ஆரஞ்சு தொப்பி

இந்த ஆட்டத்தில் 83 ரன்கள் குவித்த உத்தப்பா, மேக்ஸ்வெல்லிடம் இருந்து ஆரஞ்சு தொப்பியையும் பறித்தார். ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை ஆரம்பம் முதலே மேக்ஸ்வெல் வைத்திருந்தார். இப்போது அது உத்தப்பா வசமாகியுள்ளது. உத்தப்பா 13 ஆட்டங்களில் விளையாடி 5 அரைசதங்களுடன் 572 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். மேக்ஸ்வெல் 533 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in