Published : 27 Feb 2020 08:06 AM
Last Updated : 27 Feb 2020 08:06 AM

மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்: அரை இறுதி முனைப்பில் இந்திய அணி- நியூஸிலாந்துடன் இன்று மோதல்

மெல்பர்ன்

மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிதனது 3-வது ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இன்று மோதுகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான 7-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணிமுதல் ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது.

இதன் மூலம் 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் இந்திய அணி முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் மெல்பர்னில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்திய மகளிர் அணி. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் அரை இறுதிக்கு முன்னேறுவதை இந்திய அணி உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணியின் மட்டை வீச்சு மற்றும் பந்து வீச்சு கவனத்தை ஈர்க்கக்கூடியதாக இருந்தது. 16 வயதான ஷஃபாலி வர்மா, வங்கதேசத்துக்கு எதிராக 17 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் 29 ரன்கள் சேர்த்து அணிக்கு பலம் சேர்த்திருந்தார் ஷஃபாலி வர்மா.

இதேபோல் ஜெமிமா ரோட்ரிக்ஸும் முறையே 26, 34 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்திருந்தார். டாப் ஆர்டரில் கேப்டன் ஹர்மான்பிரீத் கவுரிடம் இருந்து மட்டுமே பெரிய அளவிலான ரன் குவிப்பு வெளிப்படவில்லை. கடந்த ஆட்டத்தில் காய்ச்சல் காரணமாக களமிறங்காத ஸ்மிருதி மந்தனா இன்று களமிறங்கக்கூடும்.

நடுவரிசையில் தீப்தி சர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி பலம் சோக்கக்கூடியவர்களாக உள்ளனர். இதில் தீப்தி சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 49 ரன்கள் சேர்த்து அசத்தியிருந்தார். அதேவேளையில் வேதா கிருஷ்ணமூர்த்தி, வங்தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிக்கட்ட ஓவர்களில் 11 பந்துகளில் 20 ரன்கள் விளாசினார்.

இவர்களிடம் இருந்து மேலும்ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். பந்து வீச்சு துறையில் பூணம்யாதவ் தனது சுழலால் இரு ஆட்டங்களிலும் கூட்டாக 7 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். வேகப் பந்து வீச்சில் 5 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள ஷிகா பாண்டேவும் அணிக்கு பலம் சேர்த்து வருகிறார்.

நியூஸிலாந்து மகளிர் அணி தனது முதல் ஆட்டத்தில் இலங்கையை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் தற்போது இந்தியாவுக்கு எதிராக களமிறங்குகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இருதரப்பு டி 20 தொடரில் நியூஸிலாந்து 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது.

நியூஸிலாந்து அணியில் கேப்டன் சோஃபி டெவின், சுஸி பேட்ஸ்ஆகியோர் பேட்டிங்கில் சிறந்த பார்மில் உள்ளனர். இதில் சோஃபி டெவின், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 55 பந்துகளில் 75 ரன்கள் விளாசியிருந்தார். பந்து வீச்சுதுறையில் வேகப் பந்து வீச்சாளரான லியா தஹுஹுவும், சுழலில் அமெலியா கெரும் இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.

நேரம்: காலை 9.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, 2

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x