

5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வீராங்கனை என்ற பெயரெடுத்த ரஷ்ய வீராங்கனையுமான மரிய ஷரபோவா டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.
அழகு, நளினம், திறமை, விளையாட்டு என அனைத்தும் ஒருங்கே இருந்த ஷரபோவா டென்னிஸ் விளையாட்டு மட்டுமல்லாமல், மாடலிங்கிலும் கோலோச்சினார். ஆனால், ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடைக்குப் பின் அவரின் டென்னிஸ் வாழ்க்கை திசை திரும்பியது. தனது 32-வது வயதில் டென்னிஸ் விளையாட்டிலிருந்து விடைபெற்றார்.
கடந்த 1987-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி ரஷ்யாவில் பிறந்த மரிய ஷரபோவா, கடந்த 1994-ம் ஆண்டில் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். தனது 17-வது வயதில் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடிய மரிய ஷரபோவா முதன்முதலாக விம்பிள்டனில் 2004-ம் ஆண்டு பட்டம் வென்றார்.
அதன்பின் 2006-ம் ஆண்டு யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியிலும், 2008-ம் ஆண்டில் ஆஸ்திரேலியன் ஓபனிலும், 2012, 2014-ம் ஆண்டுகளில் பிரெஞ்சு ஓபனிலும் ஷரபோவா பட்டம் வென்றார்.
டபிள்யுடிஏ டென்னிஸ் உலகில் தனது 18-வது வயதிலேயே உலகின் மிகச்சிறந்த வீராங்கனை எனும் பெயரெடுத்து தரவரிசையில் ஷரபோவா முதலிடத்தைப் பெற்றார். இதுவரை 36 டபிள்யுடிஏ பட்டங்களையும், 4 ஐடிஎப் பட்டங்களையும் ஷரபோவா வென்றுள்ளார்.
2007-ம் ஆண்டு முதன்முதலில் தோள்பட்டை வலியால் ஷரபோவா அவதிப்பட்டார். இருப்பினும் காயத்திலிருந்து மீண்டுவந்து 2008-ம் ஆண்டில் ஆஸ்திரேலியன் ஓபனில் பட்டம் வென்றார். அதன்பின் 2014-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபனிலும் காயத்தால் ஷரபோவா அவதிப்பட்டார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபனில் விளையாடும்போது, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார். இதில் 15 மாதங்கள் விளையாட ஷரபோவாவுக்கு சர்வதேச ஊக்கமருந்து தடை அமைப்பு தடை விதிக்கப்பட்டது. அந்த தடைக்குப் பின் வந்த ஷரபோவா, டென்னிஸில் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை.
இதையடுத்து, ஷரபோவா இன்று தனது 32-வது வயதில் டென்னிஸிலருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பிரான்ஸிலிருந்து வெளியாகும் ஒரு வார ஏட்டுக்கு ஷரபோவா அளித்துள்ள பேட்டியில், "நான் டென்னிஸுக்கு குட்பை சொல்கிறேன். 5 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுவிட்டேன். என்னுடைய வெற்றிக்கு முக்கியக் காரணம் என்னவென்றால், நான் ஒருபோதும் பின்னோக்கிப் பார்த்தது இல்லை. முன்னோக்கிப் பார்த்ததும் இல்லை. நான் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருந்ததால், நிச்சயம் என்னை நம்பமுடியாத இடத்துக்கு நகர்த்த முடியும் என்று நம்பினேன். நான் என்னுடைய வாழ்க்கையை டென்னிஸ் விளையாட்டுக்காக அர்ப்பணித்தேன். டென்னிஸ்தான் எனக்கு வாழ்க்கையைக் கொடுத்தது.
ஆனால், நான் ஓய்வு பெற்றபின், டென்னிஸ் விளையாட்டை ஒவ்வொரு நாளும் இழப்பேன். பயிற்சியை இழப்பேன். அன்றாட வாழ்க்கையில் டென்னிஸை இழப்பேன். சூரிய உதயத்திலிருந்து மறைவு வரை என்னுடைய பயிற்சிக்காக என்னுடைய காலில் ஷூவை அணிய முடியாது. என்னுடைய பயிற்சியாளர்களை, எனது அணியை அனைவரும் இழக்கிறேன்
நான் இப்போது திரும்பிப் பார்க்கிறேன். நான் டென்னிஸில் மிகப்பெரிய மலையைக் கடந்து வந்திருக்கிறேன். என்னுடைய பாதை முழுவதும் பள்ளத்தாக்குகளும், வேலிகளும் நிறைந்தவை. ஆனால் உச்சியிலிருந்து பார்த்தால் எனது பாதை நம்பமுடியாதவை''.
இவ்வாறு ஷரபோவா தெரிவித்தார்.