

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 புள்ளிகளில் முதலிடத்தை இழந்தார்.
தொடர்ந்து விராட் கோலிக்கு நெருக்கடி கொடுத்துவந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், 911 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 2 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 42 ரன்களிலும் ஆட்டமிழந்தார். கோலியின் மோசமான ஆட்டம் காரணமாக தரவரிசையில் 906 புள்ளிகள் பெற்றபோதிலும் 5 புள்ளிகளில் முதலிடத்தை இழந்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் டெஸ்ட் தரவரிசையில் ஆஸி. வீரர் ஸ்மித் முதலிடத்தைப் பிடித்தார். அதன்பின் 8-வது முறையாக ஸ்மித் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அதேசமயம், மற்ற இந்திய வீரர்களான ரஹானே (760) 8-வது இடத்திலும், புஜாரா (757) 9-வது இடத்திலும், மயங்க் அகர்வால் (727) 10-வது இடத்திலும் மாற்றமில்லாமல் உள்ளனர்.
இதில் வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்ட்டில் ரஹானே 75 ரன்கள் சேர்த்ததையடுத்து, ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்திலும், அரை சதம் அடித்த மயங்க் அகர்வால் 10-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
முதல்டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸிலும் மோசமாக விளையாடியதால், புஜாரா 2 இடங்கள் பின்தங்கி 9-வது இடத்துக்குச் சரிந்துள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான வரிசையில், இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் 9-வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதிலும் அவர் ஒரு இடம் பின்தங்கி 9-வது இடத்துக்குச் சரிந்துள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அஸ்வின் (765) மட்டுமே இந்திய வீரர் ஆவார்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா முதல் டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்தியதையடுத்து, தரவரிசையில் 17-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.ர்
நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் டிம் சவுதி, டிரெண்ட் போல்ட் முதல் டெஸ்ட் போட்டியில் முறையே 9 விக்கெட்டுகளையும், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் சவுதி 6-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். கடந்த 2014-ஆண்டுக்குப் பின் தரவரிசையில் மிகச்சிறந்த உயர்த்துக்கு இப்போது வந்துள்ளார். டிரெண்ட் போல்ட் 13-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரவிந்திர ஜடேஜா 3-வது இடத்திலும், அஸ்வின் 5-வது இடத்திலும் உள்ளனர்.