Published : 26 Feb 2020 02:48 PM
Last Updated : 26 Feb 2020 02:48 PM

நியூஸி. பவுலர்கள் போல் இந்திய பவுலர்களுக்கு ஸ்விங் ஆகவில்லையே ஏன்? - சஞ்சய் மஞ்சுரேக்கர் கேள்வி

வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து பவுலர்களுக்கு நிறைய ஸ்விங் ஆனது, ஆனால் இந்திய பவுலர்களுக்கு ஸ்விங் ஆகவில்லை என்கிறார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.

ஆனால் ஒருகாலத்தில் ஜாகிர்கான், இஷாந்த் சர்மா, ஆர்.பி. சிங், இர்பான் பத்தான் முதற்கொண்டு ஸ்விங் எடுக்காத ஆஸி. பிட்ச்களிலும் பந்துகளை ஸ்விங் செய்து பார்த்திருக்கிறோம், முனாஃப் படேல் கூட தன் முதல் நியூஸிலாந்து தொடரில் நன்றாக ஸ்விங் செய்தார். தென் ஆப்பிரிக்காவில் ரிவர்ஸ் ஸ்விங்கில் காலீஸையே ஆட்டிப்படைத்தார். சமீபமாக தென் ஆப்பிரிக்காவில் புவனேஷ்வர் குமார், அதற்கு முன்பு இங்கிலாந்திலும் புவனேஷ்வர் குமார் பந்துகளை ஸ்விங் நன்றாகச் செய்ததைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பேட்டிங்கிலும் நன்றாக ஆடிய நிலையில் செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் புவனேஷ்வர் குமாரை உட்கார வைத்தனர் ரவிசாஸ்திரியும் விராட் கோலியும். உண்மையில் நியூஸிலாந்து போன்ற பிட்ச்கள், சூழ்நிலைகளில் புவனேஷ்வர் குமார், பிரவீண் குமார், போன்ற பவுலர்களே சோபிக்க முடியும்.

இஷாந்த் சர்மா தன் அனுபவத்தில் நன்றாக வீசினார், ஆனால் ஷமி, பும்ரா சொதப்பினர். இது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும், ஏனெனில் இதே பந்து வீச்சுதான் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக தொடரை வெல்ல காரணமாக இருந்தக் கூட்டணியுமாகும். பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் திறமை குறித்த சந்தேகங்கள் எழுகின்றன, ராஜர் பின்னி, ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா, ஸ்ரீநாத் போன்றோர் இருக்க வேண்டிய இடத்தில் ரவிசாஸ்திரியின் ஆதரவுடன் பாரத் அருண் நீடித்து வருகிறார்.

ஆனால் இப்போது எப்படி திடீரென பந்து வீச்சில் ஒன்றுமில்லாமல் போனது, இந்தக் கேள்வி முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சுரேக்கருக்கும் உதித்திருக்கிறது.

அதற்கு அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளிக்கும் போது,

“இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை விட எப்படி நியூஸிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்து அதிகமாக ஸ்விங் ஆகிறது, அதிகமாக வளைவது எப்படி? ஏனெனில் இத்தகைய பிட்ச்களில் பவுலரின் மணிக்கட்டு நிலை ஒரு கோணமாக இருப்பதுதான் ஸ்விங்குக்கு அவசியமானது. இந்திய அணியின் டாப் 3 வேகப்பந்து வீச்சாளர்களும் டாப் கிளாஸ் என்றாலும் இவர்கள் முற்று முழுதுமான ஸ்விங் பவுலர்கள் இல்லை என்பதே” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x