

பிக்பாஷ் டி20 லீகில் 705 ரன்கள், இது ஒரு புதிய பிக் பாஷ் சாதனை என்றால் சாம்பியன்களான சிட்னி சிக்ச்ர்ஸ் அணிக்கு எதிராக அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 147 நாட் அவுட், நல்ல சிக்கன டி20 பவுலர், நல்ல பீல்டர்... இப்படிப்பட்ட ஆல்ரவுண்டரை புறக்கணிக்கலாமா, இவர் 3 வடிவங்களிலும் சிறந்து விளங்கக் கூடியவர் என்று ஆஸ்திரேலியாவின் டேவிட் ஹஸ்ஸி ஆதங்கப்படுகிறார்.
டேவிட் ஹஸ்ஸி ஆதங்கப்படும் அந்த ஆல்ரவுண்டர் யார் தெரியுமா? அவர்தான் மார்கஸ் ஸ்டாய்னிஸ்.
2019 உலகக் கோப்பைக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஸ்டாய்னிஸ் ஓரங்கட்டப்பட்டு வருகிறார். டி20 கிரிக்கெட்டுக்கு என்றே அளவெடுத்து தைத்தது போன்ற வீரர் ஸ்டாய்னிஸ். ஆனாலும் ஒருநாள் போட்டிகளிலும் அவர் சிறப்பாகவே ஆடினார். இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து அவரை விலக்கி வைத்தது ஆஸி. அணித் தேர்வுக்குழு.
ஆனால் அவரோ பிக்பாஷ் லீகில் வெளுத்து வாங்கினார்.
இந்நிலையில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் ஆஸி. வீரருமான் டேவிட் ஹஸ்ஸி கூறும்போது, “இன்றைய தேதியில் உலகிலேயே டி20 கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர் என்றால் ஸ்டாய்னிஸ்தான், டி20 கிரிக்கெட்டில் மட்டுமல்ல வாய்ப்பளித்தால் டெஸ்ட், ஒருநாள் இரண்டிலுமே அவர் சிறந்த ஆல்ரவுண்டராக நிரூபிப்பார்.
நான் மட்டும் தேர்வாளராக இருந்தால் ஸ்டாய்னிஸ் டெஸ்ட், ஒருநாள், டி20 மூன்றிலும் ஆஸ்திரேலிய அணியில் ஆடியிருப்பார். இவரிடம் இத்தனை திறமை இருக்கிறது, ஸ்டாய்னிஸ் அணிக்காக ஆடும் அருமையான வீரர் அவர்.
அவரை வெறும் தொடக்க வீரர் என்று முத்திரைக் குத்தக் கூடாது மிடில் ஆர்டரிலும் வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டால் சிறந்து விளங்குவார். எந்த நிலையிலும் அவரை இறக்கலாம், பிரமாதமான பீல்டர், கோச் சொல்வதைச் செய்யக் கூடியவர்” என்று ஸ்டாய்னிஸை புகழ்ந்து தள்ளினார் ஹஸ்ஸி.