அஸ்வின் 6 விக். - 183 ரன்களுக்குச் சுருண்டது இலங்கை

அஸ்வின் 6 விக். - 183 ரன்களுக்குச் சுருண்டது இலங்கை
Updated on
2 min read

கால்லேயில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 183 ரன்களுக்குச் சுருண்டது.

இந்தியத் தரப்பில் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் 13.4 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 6 விக்கெட்டுகளை 46 ரன்களை மட்டுமே கொடுத்து எடுத்துள்ளார்.

அமித் மிஸ்ரா கடைசியில் சந்திமால் (59), கவுஷல் (0) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹேட்ரிக் வாய்ப்பு பெற்றார். ஆனால் அடுத்த பந்தை லெக் திசையில் வீச ஹேட்ரிக் வாய்ப்பு எட்டாக்கனியாகிவிட்டது.

இலங்கை அணியில் 60/5 என்ற நிலையிலிருந்து மேத்யூஸ் மற்றும் சந்திமால் ஆகியோர் ஸ்கோரை 139 ரன்களுக்கு உயர்த்த முடிந்தது. காரணம் உணவு இடைவேளைக்குப் பிறகு இசாந்த் பந்தில் சஹா ஒரு எளிதான கேட்சை சந்திமாலுக்கு கோட்டைவிட்டதே. அவர் வருண் ஆரோனின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார்.

மேத்யூஸ், அஸ்வினை ஒரு பவுண்டரியுடன் தொடங்கினார். அதன் பிறகும் அவர் தன் பாணியில் பாசிடிவ்வாகவே ஆடினார். 92 பந்துகளில் அவர் 6 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் (ஹர்பஜன் பந்தில் சிக்ஸ்), 64 ரன்கள் எடுத்து அஸ்வினின் பந்தில் ரோஹித் சர்மாவின் அற்புதமான கேட்சுக்கு அவுட் ஆனார்.

சந்திமால் 77 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து மிஸ்ரா பந்தில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒரு விதத்தில் இதுவும் தேவையில்லாத ஷாட்தான், ஆனால் எதிர்முனையில் விக்கெட்டுகளை அஸ்வின் எடுத்து விடுவார் என்ற அச்சத்தில் ரன்களையாவது அடித்துப் பார்ப்போம் என்ற முயற்சியில் சந்திமால் ஆட்டமிழந்தார்.

பிரசாத், ஹெராத் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முன்னதாக இன்று காலை இசாந்த் சர்மா அற்புதமாக வீசினார், அவர் வீசிய துல்லியமான கழுத்துயர பவுன்சருக்கு கருண ரத்னே கேட்ச் கொடுத்தார். பந்து எங்கு பட்டது, எங்கு கேட்ச் சென்றது என்று பேட்ஸ்மெனுக்கே தெரியவில்லை. மற்றொரு தொடக்க வீரர் சில்வாவும் வருண் ஆரோனின் ஷார்ட் பிட்ச் பந்துக்கு வீழ்ந்தார்.

அதன் பிறகு சங்கக்காராவுக்கு ஒரு பந்தை திருப்பி பீட் செய்த அஸ்வின் அடுத்த பந்தை சாதாரணமாகவே வீசினார், ஆனால் சங்கக்காரா தொடர்ந்து அஸ்வினை பின்னால் சென்று ஆடும் உத்தியைக் கடைபிடித்தார், பந்து மட்டையின் அடி இடத்தில் பட்டது இதனால் சிலி மிட் ஆஃபில் ராகுலிடம் கேட்ச் ஆனது. திரிமானே, முபாரக் ஆகியோரும் அஸ்வினின் ஆஃப் ஸ்பின்னுக்கு இரையாக இலங்கை 60/5 என்று சரிவு கண்டது.

அதன் பிறகு மேத்யூஸ், சந்திமால் பார்ட்னர்ஷிப் படுமோசமான முதல் இன்னிங்ஸ் ஸ்கோரிலிருந்து இலங்கையை மீட்டது. 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர். ஆரோன் 11 ஓவர்களில் 68 ரன்கள் வாரி வழங்கினார். மிஸ்ரா, ஹர்பஜன், இசாந்த் ஆகியோர் சிக்கனமாக வீசினர், வருண் ஆரோனும் 11 ஓவர்களில் 30 ரன்களையே வழங்கியிருந்தால் இலங்கை அணி 150 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகியிருக்கும்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி களமிறங்குகிறது. லோகேஷ் ராகுல், ஷிகர் தவண் இறங்குவார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in