

பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கும் வரை இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் முன்னேற்றம் இருக்காது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி விமர்சித்துள்ளார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அரசியல்ரீதியான உறவு மிகவும் மோசமடைந்ததால், கடந்த 7 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை. இரு அணிகளும் பொது இடத்தில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஆனால், இரு நாட்டு அணிகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் அதை இரு நாட்டு ரசிகர்களும் வரவேற்கின்றனர்.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி மீண்டும் நடத்தப்படுவது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, கிரிக்கெட் பாகிஸ்தான் சேனலுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "இந்தியப் பிரதமர் மோடி அதிகாரத்தில் இருக்கும்வரை, இந்தியாவிடம் இருந்து எந்தவிதமான பதிலும் நமக்குக் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. மோடி என்ன சிந்திக்கிறார் என்பதை நாம் மட்டுமல்ல இந்தியர்கள் கூட புரிந்துகொண்டார்கள். மோடியின் சிந்தனை முழுவதும் எதிர்மறையை நோக்கித்தான் இருக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. அதற்குக் காரணம் ஒருவர் மட்டும்தான். இருநாட்டு மக்களும் தங்கள் எல்லைகளைக் கடந்து பரஸ்பரம் நட்பு பாராட்ட வேண்டும் விரும்புகிறார்கள். மோடி என்ன செய்ய நினைக்கிறார், அவரின் திட்டம் என்ன என்று எனக்குப் புரியவில்லை" எனத் தெரிவித்தார்.
கடந்த 2006-ம் ஆண்டு கடைசியாக ராகுல் திராவிட் தலைமையில் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்றது அதன்பின் 14 ஆண்டுகளாக அங்கு செல்லவில்லை. அதிலும் 2008 மும்பை தாக்குதலுக்குப் பின் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவு மிகவும் மோசமடைந்தது குறிப்பிடத்தக்கது.