Published : 03 Aug 2015 03:56 PM
Last Updated : 03 Aug 2015 03:56 PM

5 பவுலர்கள், 20 விக்கெட்டுகள்: விராட் கோலியின் வெற்றி பார்முலா

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 பவுலர்களை அணியில் சேர்த்து விளையாடும் உத்தியைக் கடைபிடிக்கப் போவதாக இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

"5 பவுலர்கள் அணியில் விளையாடும் சாத்தியம் உள்ளது. 20 எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் இதன் நோக்கம். இவ்வாறுதான் நாம் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியும். சிறந்த பவுலர்கள் விளையாட வேண்டும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன்.

மேலும் நம்மிடையே அஸ்வின், புவனேஷ் குமார், ஹர்பஜன் சிங் ஆகியோர் உள்ளனர், இவர்கள் பின்வரிசையில் பயனுள்ள பேட்ஸ்மென்களாகவும் பங்களிப்பு செய்ய முடியும். டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் சராசரி 40. எனவே அவர் நமது அணியின் ஆல்ரவுண்டர். வீரர்களுக்கு இலக்கை நிர்ணயித்து சில இடங்களில் அவர்களின் ஆட்டத்தில் மேம்பாடு பெற செய்து, அணிக்குத் தேவைப்படும் கூடுதல் திறமைகளை கொண்டு வர முடியும்.

சிறந்த பந்துவீச்சுதான் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்லும், பேட்ஸ்மென்களும் கூடுதல் பொறுப்பு எடுத்துக் கொள்வது அவசியம்” என்றார்.

தொடக்க இடத்துக்கு ராகுல், விஜய், ஷிகர் தவண் என்று போட்டி நிலவுவது பற்றி கோலி கூறிய போது, “அந்த இடத்துக்கு போட்டி பலமாகவே உள்ளது” என்றார்.

”கே.எல்.ராகுல் ஆஸ்திரேலியாவில் நன்றாகவே ஆடினார். அப்போது ஷிகர் தவண் சீரான முறையில் ஆடவில்லை. அப்போது ராகுல் அவர் இடத்துக்கு வந்தார், பிறகு ஷிகர் தவணும் ரன்குவிப்பில் ஈடுபட்டார். விஜய்யும் சீரான முறையில் ரன்கள் எடுத்து வருகிறார்.

ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் கூட அபாயகரமான வீரர், அவர் ஆட ஆரம்பித்தால், எதிரணியிடமிருந்து வாய்ப்புகளை வெகு விரைவில் பிடுங்கி விடுவார். டெஸ்டில் வெற்றி பெற இத்தகைய பேட்டிங்கும் அவசியம்.

எனவே ரோஹித்துக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்குவது உசிதம். அவர் 3-ம் நிலையில் இறங்கினால் நடுக்களம் வலுவடையும் அவரும் விரைவில் ரன்குவிப்பார். அவர் இயல்பான திறமை படைத்தவர், இவ்வகையில்தான் மும்பைக்காக அவர் நிறைய ரன்களைக் குவித்துள்ளார். எனவே விரைவாக ஒரு பெரிய ஸ்கோரை அவர் எடுக்க வாய்ப்பு அளிக்கப்படும்” என்றார் கோலி.

ஆனால், ரோஹித் சர்மா 3-ம் நிலையில் 3 இன்னிங்ஸ்களில் 98 ரன்களையே எடுத்துள்ளார், மாறாக 6-ம் நிலையில் அவரது சராசரி 50 என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பேட்டிங் பற்றி குறிப்பிட்ட கோலி, “சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் கடினமான பிட்சில் ஆடி பயிற்சி பெற விரும்பினேன், அதனால்தான் சென்னையில் இந்தியா ஏ அணியில் ஆடினேன், கடந்த ஒரு வாரத்தில் சுமாரான ஒரு பயிற்சி கிடைத்தது.

பந்துகளை ஸ்வீப் செய்வதில் நான் இன்னும் கொஞ்சம் மேம்பாடு அடைய வேண்டும். ஆஸ்திரேலியாவில் நிறைய ஆடினேன், ஆனால் ஸ்பின்னுக்கு ஆதரவான ஆடுகளத்தில் ஸ்வீப் ஒரு சவால். திராவிட்டும் அந்தப் போட்டியில் எனது தவறுகளைச் சுட்டிக் காட்டினார். எனவே பயிற்சி ஆட்டம் உதவிகரமாக அமைந்தது” என்றார்.

சேவாகின் அபாரமான 2008ம் ஆண்டு கால்லே டெஸ்ட் 201 பற்றி...

”அப்போது அஜந்தா மெண்டிஸ் ஒரு புதிர் பவுலர், அவரை சேவாக் சரியான விதத்தில் எதிர்கொண்டு அடித்து ஆடினார், அதுவும் அவரை ஒரு லெக்ஸ்பின்னர் போலவே அவர் கையாண்டார். அந்த இன்னிங்ஸ் முழுதையும் நான் பார்த்தேன். சில வேளைகளில் எச்சரிக்கை அணுகுமுறையை அதிகமாக பிரயோகித்து தவறிழைப்பதும் நடக்கிறது. அதாவது டெஸ்ட் கிரிக்கெட் என்றால் இப்படித்தான் ஆடவேண்டும் என்ற கொள்கையை அதிகம் நாம் நீட்டித்துக் கொண்டே செல்கிறோம், ஆனால் சேவாக் அன்று எப்படி தாக்குதல் ஆட்டம் ஆடவேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தார்” என்றார் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x