Published : 24 Feb 2020 09:06 AM
Last Updated : 24 Feb 2020 09:06 AM

குவிண்டன் டி காக் காட்டடி, பவுலர்கள் அபாரம்; வார்னர் 67 நாட் அவுட் வீண்: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்ற 2வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலியாவை தென் ஆப்பிரிக்கா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் இதுவரை 1-1 என்று சமனிலை எய்தியுள்ளது.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா குவிண்டன் டி காக் காட்டடியில் (47 பந்து 70) 158/4 என்று முடிய தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 98/1 என்ற நிலையிலிருந்து 146/6 என்று முடிந்து தோல்வி கண்டது. இதில் விநோதம் என்னவெனில் டேவிட் வார்னர் 56 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் நாட் அவுட்டாக ஒரு முனையில் தேங்கியதே.

தென் ஆப்பிரிக்க அனி 170 ரன்களை எடுத்திருக்கும் ஆனால் ஸ்டீவ் ஸ்மித் பவுண்டரி அருகே செய்த சாகச பீல்டிங்கினால் 2 சிக்சர்களைத் தடுத்து விட்டார். கடைசி 5 ஓவர்களில் 43 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் தன் 16வது டி20 சர்வதேச அரைசதத்தை எடுத்த டேவிட் வார்னர் ஒரு முனையில் நிற்கும் போது 20 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 30 ரன்களையே எடுத்தது ஆஸ்திரேலியா. வார்னருக்கு ஸ்ட்ரைக்கே கிடைக்காமல் செய்து விட்டனர் தென் ஆப்பிரிக்க அணியினர்.

முன்னதாக குவிண்டன் டி காக் மிகப்பிரமாதமாக ஆடி 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 70 ரன்களை எடுக்க ரசி வான் டெர் டியுசன் 26 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் எடுக்க டேவிட் மில்லர் மட்டையிலிருந்து காற்று பலமாக வீச 13 பந்துகளில் 11 ரன்களையே எடுத்தார், காரணம் கேன் ரிச்சர்ட்ஸன் (2/21) மற்றும் கமின்ஸ் (1/31) ஆகியோரின் பந்து வீச்சுதான். 6 ஓவர்களில் 60 ரன்கள் என்ற நிலையிலிருந்து ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்க அணியை முடகியது. குறிப்பாக ஆஷ்டன் ஆகர் (28/0), கேன் ரிச்சர்ட்ஸன் மிகச் சிக்கனமாக வீசினர், கடைசியில் தென் ஆப்பிரிக்கா 5 ஒவர்களில் 36 ரன்களையே அடிக்க முடிந்தது. ஸ்டார்க் 4 ஒவர் 38 ரன்கள்.

டி காக் தனது 13வது இன்னிங்சில் மூன்று வடிவங்களிலும் 8வது அரைசதம் அடித்து சரியான பார்மில் இருப்பதை நிரூபித்தார். வான் டெர் டியூஸனின் சிக்ஸ் ஒன்று கிட்டத்தட்ட மைதானத்துக்கு வெளியே இருக்கும் கடலில் போய் விழுந்திருக்கும்.. மிகப்பெரிய ஹிட்.

159 ரன்கள் இலக்கு ஒன்றுமில்லை என்று நினைத்து வார்னரும் பிஞ்சும் இறங்கி 4.4 ஓவர்களில் 48 ரன்கள் சேர்த்தனர், இத்தனைக்கும் ரபாடா, நார்ட்டியே நல்ல வேகத்தில் வீசினர். ஆனால் வார்னர் மிக அருமையாக இடைவெளியைக் கண்டுபிடித்துக் கொண்டார். அப்போது இங்கிடி பந்தில் 14 ரன்களில் பிஞ்ச் பவுல்டு ஆனார்

ஸ்டீவ் ஸ்மித் இறங்கி 26 பந்துகளில் 29 ரன்கள் என்று வார்னருடன் சேர்ந்து அரைசதக் கூட்டணி அமைக்க ஸ்கோர் 12.2 ஓவர்களில் 98/1 என்று இருந்தது. அப்போது பிரிடோரியஸிடம் ஸ்மித், டுபிளெசிசின் அருமையான கேட்சுக்கு வெளியேறினார்.

அலெக்ஸ் கேரி (14), வார்னருடன் சேர இருவரும் சேர்ந்து 3 ஓவர்களில் 26 ரன்கள் சேர்க்க 15.3 ஓவர்களில் 124/2 என்று நல்ல நிலையில்தான் இருந்தது, ஆனால் மீண்டும் லுங்கி இங்கிடி அப்போது கேரியை பவுல்டு செய்தார். லெக் ஸ்டம்ப் பறந்தது. மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்ததற்குக் காரணம் தென் ஆப்பிரிக்காவின் அபரிமிதமான பீல்டிங்தான். இங்கிடி பந்தில் நேராக மிட்செல் மார்ஷ் தூக்கி அடிக்க டுபிளெசிஸ் டைவ் அடித்துப் பிடிக்க முயற்சி செய்தார், ஆனால் பந்தை தட்டி விட மில்லர் மிக அருமையாக அதை ஃபுல் ஸ்ட்ரெட்ச் டைவ் அடித்து கேட்ச் எடுத்தார் திகைப்பூட்டும் கேட்ச் அது. 138/4.

மேத்யூ வேட் 1 ரன்னில் ரபாடா பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேற, ஆஷ்டன் ஆகர் 1 ரன்னில் நார்ட்யே ஆஃப் கட்டருக்கு ஆஃப் ஸ்டம்ப் பறக்க வெளியேறினார். மிட்செல் ஸ்டார்க் 2 ரன்கள் எடுக்க அதிசயமாக வார்னர் ஒருமுனையில் 67 ரன்களில் தேங்க 20 ஓவர்களில் 146/6 என்று தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா

லுங்கி இங்கிடி 41 ரன்களுக்கு 3 விக்கெட். ஆனால் மிகப்பிரமாத சிக்கனம் காட்டியவர் ரிஸ்ட் ஸ்பின் பவுலர் தப்ரைஸ் ஷம்சி இவர் 4 ஒவர் 17 ரன்கள்தான் விட்டுக் கொடுத்தார். ஆட்ட நாயகன் குவிண்டன் டி காக்.

கேப் டவுனில் வாழ்வா சாவா இறுதி டி20 போட்டியில் புதனன்று மோதுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x