

வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் 200 ரன்களைக் கூட எடுக்க முடியவில்லை. அகர்வால் தவிர மற்றவர்களுக்கு அயல்நாட்டில் டெஸ்ட் போட்டிகளுக்கானஎந்த வித பொறுமையோ, சமயோசிதமோ, உத்தியோ இல்லை என்பது பட்டவர்த்தனமானது.
இந்தத் தொடருக்கு முன்பாகவும், தொடரின் போதும் கூட டாஸ் ஒரு பொருட்டேயல்ல, டாஸ் வெற்றி தோல்விகளைக் கடந்து விட்டோம் எந்த நிலையிலும் எப்படியும் ஆடுவோம் என்றெல்லாம் வீராவேச வசனம் பேசினார்கள் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும். ஆனால் இப்போது தோல்விக்குப் பிறகு டாஸ் முக்கியமானது என்கிறார் விராட் கோலி.
புஜாரா 81 பந்துகள் ஆடி 11 ரன்கள் எடுப்பதெல்லாம் இந்தியப் பிட்ச்களில் கூட சரியில்லாத விஷயம், அங்கு தளர்வான பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட வேண்டும், ஆனால் புஜாரா ஆஃப் வாலி, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஷார்ட் பிட்ச் பந்துகளையெல்லாம் ஆடாமல் விட்டார். இந்த அணுகுமுறை ஒவ்வாது. இதனால் எதிர்முனையில் இருக்கும் மயங்க் அகர்வாலை அவர்கள் ‘ஒர்க் அவுட்’ செய்து விடுகின்றனர். இதை உணர்ந்துதான் புஜாரா பேட் செய்ய வேண்டும், ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய வேண்டும், கிரிக்கெட் என்றால் ரன்கள், விக்கெட்டுகள் அவ்வளவுதான். ஒரு முனையில் எதுவும் செய்யாமல் நின்று கொண்டேயிருப்பேன் என்பதெல்லாம் பம்மாத்து கிரிக்கெட் என்றே கூறப்பட வேண்டும்.
அதே போல் பவுலர்கள் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, ஷமி, போன்றோர் ஐபிஎல் கிரிக்கெட் வருவதால் காயமடைந்து விடக்கூடாது என்று எச்சரிக்கையுடன் வீசியதால்தான் கடைசி 3 நியூஸிலாந்து வீரர்கள் 123 ரன்களை சேர்க்க முடிந்தது.
இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு கோலி வழக்கம் போல் ‘ஆல் இஸ் வெல்’ என்று கூறினார், ஆனால் டாஸைக் கடந்து விட்டோம் என்று கூறியவர், “டாஸ் மிக முக்கியமான ஒன்றாகி விட்டது. பேட்டிங்கில் சுத்தமாக சவாலாகத் திகழவில்லை. 220-230 ரன்கள் எடுத்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். எனவே முதல் இன்னிங்சில் மோசமான பேட்டிங் பின்னடைவை ஏற்படுத்தியது.
பவுலிங்கை பொறுத்தவரை கடினமாகத் திகழ்ந்தோம், சவால் அளித்ததில் பெருமை கொள்கிறோம். முதல் இன்னிங்சில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்தது வரை நன்றாகத் திகழ்ந்தோம், முன்னிலையை 100 ரன்களுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தோம் ஆனால் கடைசி 3 வீரர்களின் பேட்டிங் கடினமாக்கியது.
பவுலர்கள் இன்னமும் கூட கட்டுக்கோப்புடன் வீசியிருக்க வேண்டும், பவுலர்கள் தங்கள் ஆட்டத்தில் திருப்தி கொள்ளவில்லை. பிரிதிவி ஷா போன்றவர்களை குறை சொல்ல வேண்டாம். 2 அயல்நாட்டு டெஸ்ட்களில்தான் ஆடியுள்ளார். ரன்கள் எடுக்கும் வழியை அவர் கண்டுபிடித்துக் கொள்வார். பேட்டிங்கில் அகர்வால், ரஹானே தவிர மற்றவர்கள் சரியாக ஆடவில்லை. பேட்டிங்கில் பெரிய ஸ்கோரை எடுத்தால்தான் நம் பவுலர்கள் சவால் அளிக்க முடியும், இதுதான் நம் பலம், இந்த டெஸ்ட் மேட்சில் இந்த அம்சம் இல்லை” என்றார்.