

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆஸ்டன் ஆகர், ரவிந்திர ஜடேஜாவுக்குப் புகழாராம் சூட்டியுள்ளார்.
ஜோகன்ஸ்பர்க் நகரில் நேற்று ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. பிஞ்ச் 42 ரன்களும், ஸ்மித் 45 ரன்களும் சேர்த்தனர்.
197 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 14.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆஸ்டன் ஆகர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற ஆஸ்டன் ஆகர் தனது பந்துவீச்சு குறித்துக் கூறுகையில், "எனக்கு கிரிக்கெட்டில் பிடித்த வீரர் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ராக் ஸ்டார் ரவிந்திர ஜடேஜாதான். கடந்த முறை இந்தியாவுக்கு வந்திருந்தபோது ரவிந்திர ஜடேஜாவுடன் நீண்ட நேரம் பேசினேன்.
சுழற்பந்துவீச்சு குறித்து அவரிடம் ஏராளமான ஆலோசனைகளைக் கேட்டேன். அவர் எனக்குப் பயனுள்ள டிப்ஸ்களை வழங்கினார். அவரின் பேச்சு என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. ஜடேஜாவைப் போலவே கிரிக்கெட்டில் உருவாக வேண்டும், விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.
கிரிக்கெட்டில் எனக்குப் பிடித்த வீரர் ரவிந்திர ஜடேஜாதான். உண்மையில் ஜடேஜா ஒரு ராக் ஸ்டார். ஃபீல்டிங், பேட்டிங், பந்துவீச்சு அனைத்திலும் தன்னால் முடிந்த முத்திரையைப் பதித்துவிடுவார். அவரை நான் பார்த்தாலே எனக்கு நம்பிக்கை ஊற்றெடுக்கும். அவரின் பேட்டிங்கை எப்போது பார்த்தாலும் நேர்மறையாக, அணியின் வெற்றிக்காகவே இருக்கும். ஃபீல்டிங்கில் வந்தாலும் ஜடேஜாவின் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடிக்கும்" என ஆஸ்டன் ஆகர் தெரிவித்தார்.