டி20 உலகக்கோப்பை: முதல் ஆட்டத்திலேயே ஆஸி.யை வீழ்த்திய இந்திய மகளிர் அணி; பூனம் யாதவ் அசத்தல் பந்துவீச்சு

ஆட்ட நாயகன் விருது வென்ற பூனம் யாதவ்.
ஆட்ட நாயகன் விருது வென்ற பூனம் யாதவ்.
Updated on
2 min read

பூனம் யாதவின் அபாரமான பந்துவீச்சால் சிட்னியில் நடந்த மகளிருக்கான டி20 உலகக்கோப்பைப் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கவுர் தலைமையிலான இந்திய அணி.

முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. 133 ரன்கள் சேர்த்தால வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்து 17 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்திய அணியின் சார்பி்ல அபாரமாகப் பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர் பூனம் யாதவ் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெற்றிக்கு முக்கியக் காரணமாக பூனம் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலிய அணித் தரப்பில் விக்கெட் கீப்பர் ஹீலே (51), கார்ட்னர் (34) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார்கள். கடைசி 40 ரன்களுக்கு மட்டும் 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்துள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு மந்தனா, வர்மா நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். மந்தனா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். வர்மா 29 ரன்களில் வெளியேறினார். ரோட்ரிக்ஸ் 26 ரன்களிலும், கேப்டன் கவுர் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக டி சர்மா 49 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். துணையாக ஆடிய கிருஷ்ணமூர்த்தி 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் ஜோனாஸன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

133 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஹீலே, மூனே ஆட்டத்தைத் தொடங்கினர். ஹீலே ஒருபக்கம் அதிரடியாக ஆடியபோதிலும் மறுமுனைவில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது ஆஸ்திரேலிய அணி.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பாண்டே, யாதவ் பந்துவீச்சுக்கு ஆஸ்திரேலிய வீராங்கனைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 76 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த 40 ரன்களுக்குள் மீதமுள்ள 5 விக்கெட்டுகளையும் இழந்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதிலும், நிலையாக ஆடிய விக்கெட் கீப்பர் ஹீலே அரை சதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். கார்ட்னர் 34 ரன்களில் வெளியேறினார்.

19.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்களில் சுருண்டு 17 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்திய அணித் தரப்பில் பாண்டே 3 விக்கெட்டுகளையும், யாதவ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in