

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மும்பை கால்பந்து அரங்கில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - மும்பை சிட்டி எப்சி மோதுகின்றன.
மும்பை அணிக்கு இது கடைசி லீக் ஆட்டம் ஆகும். 17 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 7 வெற்றி, 5 டிரா, 5 தோல்விகளுடன் 26 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வதுஇடத்தில் உள்ளது. அதேவேளையில் சென்னையின் எப்சி 16 ஆட்டங்களில் 7 வெற்றி, 4 டிரா, 5 தோல்விகளுடன் 26 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே கோவா, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய 3 அணிகள் முன்னேறி விட்டன. மீதம் உள்ள ஒரு இடத்துக்கு மும்பை, சென்னைஅணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிபிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் கடைசி அணியாக இருக்கும். இதனால் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா? சாவா? போராட்டம் போன்றதுதான்.
இன்றைய ஆட்டத்தை மும்பை அணி டிரா செய்தாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு சென்னை அணிக்கே அதிகம் உள்ளது. ஏனெனில் சென்னை அணிக்கு மேற்கொண்டு ஒரு ஆட்டம் (வடகிழக்கு யுனைட்டெடு அணிக்கு எதிராக) எஞ்சியுள்ளது. ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்று விட்டால் சென்னையின் எப்சி-யின் பிளே ஆஃப் சுற்று கனவு தகர்ந்துவிடும்.
மும்பை அணியானது தனது கடைசி ஆட்டத்தில் கோவாவிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டிருந்தது. அதேவேளையில் சென்னையின் எப்சி தனது கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியிருந்தது. சென்னையின் எப்சி அணியில் நெரிஜஸ் வால்ஸ்கிஸ், ரஃபேல் கிரிவெல்லாரோ, சாங்க்டே, சபியா, லூசியன் கோயன் ஆகியோர் வலு சேர்ப்பவர்களாக உள்ளனர்.