Published : 21 Feb 2020 08:23 AM
Last Updated : 21 Feb 2020 08:23 AM

மகளிர் டி 20 உலகக் கோப்பை: வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி? - ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை

டி 20 உலகக் கோப்பை டிராபியுடன் உற்சாகமாக போஸ் கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங், இந்திய அணியின் கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர்.

சிட்னி

ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பைகிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, வங்கதேசம் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கும் மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று தொடங்குகிறது. லீக் ஆட்டங்கள் மார்ச் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அரை இறுதி ஆட்டங்கள் 5-ம் தேதியும், இறுதிப் போட்டி 8-ம்தேதியும் நடத்தப்பட உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளும் உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

இதுவரை நடைபெற்றுள்ள 6 டி 20 உலகக் கோப்பைகளில் 4 முறை வாகை சூடியுள்ள ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் முதல் முறையாக நடத்தப்படும் உலகக் கோப்பையில் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதேவேளையில் 2009, 2010, 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் அரை இறுதி வரை முன்னேறிய இந்திய அணி இம்முறை இறுதிப் போட்டியில் கால்பதிப்பதில் தீவிரம் காட்டக்கூடும்.

ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியிடம் தொடர்ச்சியான செயல்பாடுகள் இல்லாதது பின்னடைவாக உள்ளது. ஒரு ஆட்டத்தில் மிகப்பெரிய இலக்கை எளிதாக கடக்கும் இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் ரன்கள் சேர்க்க தடுமாறுவது வாடிக்கையாக உள்ளது.

நடுவரிசை மற்றும் பின்கள பேட்டிங்கில் சுனக்கம் ஏற்படுவதேஇதற்கு காரணமாக அறியப்படுகிறது. இதனால் இந்த விஷயத்தில் இந்திய மகளிர் அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். டாப் ஆர்டரில் ஸ்மிருதி மந்தனா, 16 வயதான ஷஃபாலி வர்மா பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.

நடுவரிசையில் ஹர்மான்பிரீத் கவுர், தீப்தி சர்மா, வேதா கிருஷ்ண மூர்த்தி, தனியா பாட்டியா, ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் கூடுதல் பொறுப்புடன் செயல்படுவதில் கவனம் செலுத்தக்கூடும். பந்து வீச்சு துறையில் இந்திய மகளிர் அணியானது சுழலையே பெரிதும் சார்ந்துள்ளது. வேகப்பந்து வீச்சில் ஷிகா பாண்டேவை தவிரநம்பிக்கை அளிக்கக்கூடிய வீராங்கனை என்று யாரையும் அறுதியிட்டு கூற முடியாத நிலையே உள்ளது.

இதனால் பவர்பிளே ஓவர்களில் ஷிகா பாண்டேவை இந்திய அணி பெரிதும் நம்பி உள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளரான டபிள்யூ.வி.ராமன் கூறும்போது, “சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாக நாங்கள் திகழ்கிறோம். 2018-ம்ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் உடற் தகுதி, களத்தில் விரைந்து செயல்படுவது, பேட்டிங் அணுகுமுறை ஆகியவற்றில் அதிக அளவிலான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது” என்றார்.

இந்திய மகளிர் அணி தனது அடுத்த ஆட்டங்களில் 24-ம் தேதி வங்கதேசத்தையும், 27-ம்தேதி நியூஸிலாந்தையும், 29-ம்தேதி இலங்கையையும் எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா: மெக் லானிங் (கேப்டன்), எரின் பர்ன்ஸ், நிக்கோலா காரே, ஆஷ்லே கார்ட்னர், ரேச்சல் ஹைனஸ், அலிசா ஹீலி, ஜெஸ் ஜோனாசென், டெலிசா கிம்மின்ஸ், சோஃபி மோலினக்ஸ், பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, மேகன் ஷட், அன்னாபெல் சதர்லேண்ட், டெய்லா விளாமின்க், ஜார்ஜியா வேர்ஹாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x