Published : 20 Feb 2020 05:47 PM
Last Updated : 20 Feb 2020 05:47 PM

வேடிக்கையான ஆங்கிலம்: நெட்டிசன்களின் கடும் கேலி வலையில் சிக்கிய பாக். வீரர் உமர் அக்மல்

உமர் அக்மலுக்கு சிறிது நாட்களாக ‘டைம்’ சரியில்லை என்றே தோன்றுகிறது, ட்ரெய்னர் முன்னிலையில் உடைகளைக் களைந்து ‘எங்கு கொழுப்பு இருக்கிறது?’ என்று கேட்டு அந்த விவகாரத்தில் மன்னிப்பு பெற்றார். பிறகு கிரிக்கெட் சூதாட்டத்தில் இவர் சிக்கியிருப்பதாக எழுந்த தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உமர் அக்மல் தன் ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்குடன் விமானத்தினுள் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு தலைப்பு வாசகம் ஒன்றை இட்டார், அதுதான் பெரிய நகைச்சுவையாக வலம் வந்து கொண்டிருக்கிறது, பிறகு நீக்கப்பட்ட அந்த ட்வீட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்து நெட்டிசன்கள் உமர் அக்மலை தாறுமாறாக கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.

அப்படி என்ன ஆங்கில வாசகம் அது என்றால், “Mother from another brother" என்று அப்துல் ரசாக்குடனான புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார் மாறாக அது “Brother from another mother" என்றே இருந்திருக்க வேண்டும். ‘இன்னொரு தாயிடமிருந்து ஒரு சகோதரன்’ என்று அர்த்தப்படுத்துவதற்குப் பதிலாக தவறாக அவரது ஆங்கிலம் சென்று விட கடும் கேலிக்குள்ளானார் உமர் அக்மல்

இது தற்போது "#UmarAkmal Quote" என்ற ஹேஷ்டேக் மூலம் வைரலாகி வருகிறது. அதாவது இதே போன்று பல வாசகங்களை எடுத்து வைத்துக் கொண்டு அதை உமர் அக்மல் கூறினால் எப்படி இருக்கும் என்று ட்வீட் செய்து அவரைக் கடுமையாகக் கலாய்த்து வருகின்றனர்.

ஒரு பயனாளர், ‘அழகாக இருப்பது குற்றமென்றால் கைது செய்யுங்கள்’ என்ற வாசகத்தை உமர் அக்மல் கூறியிருந்தால் எப்படி இருக்கும் என்று மாற்றி கூறும்போது, “குற்றமாக இருப்பது அழகு என்றால் கைது செய்யுங்கள்’ என்று கேலி செய்துள்ளார்.

இன்னொரு பயனாளர் ‘நேர்மை என்பது சிறந்த கொள்கை’(Honesty is the best policy)என்ற வாசகத்தை உமர் அக்மல் கூறியிருந்தால் ‘Policy is the best honesty என்று கூறியிருப்பார் என்று பலரும் பலவிதமான வாசகங்களை உமர் அக்மலை கேலி செய்யும் விதமாக வேண்டுமென்றே மாற்றி எழுதி கலாய்த்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x