Last Updated : 20 Feb, 2020 02:17 PM

 

Published : 20 Feb 2020 02:17 PM
Last Updated : 20 Feb 2020 02:17 PM

''அஸ்வின்தான் சரியாக இருப்பார்; 320 ரன்கள் சேர்த்தாலே போதும்''- ரஹானே வெளிப்படை

இந்திய அணியின் துணை கேப்டன் அஜின்கயே ரஹானே : கோப்புப் படம்.

வெலிங்டன்

வெலிங்டனில் உள்ள வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான பேசின் ரிசர்வ் மைதானம் நியூஸிலாந்துக்குச் சாதகமானது என்றாலும், முதல் இன்னிங்ஸில் நாங்கள் 320 ரன்கள் சேர்த்தாலே நல்ல ஸ்கோர்தான் என்று இந்திய அணியின் துணை கேப்டன் அஜின்கயே ரஹானே தெரிவித்துள்ளார்.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் வெலிங்டனில் நாளை தொடங்குகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதால், தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைக்க இந்தத் தொடர் முக்கியமானதாகும்

இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் துணை கேப்டன் அஜின்கயே ரஹானே நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''முதல் டெஸ்ட் போட்டி நடக்கும் வெலிங்டன் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமானது. உள்நாட்டுச் சூழல், காலநிலை ஆகியவை நியூஸிலாந்து அணிக்குத்தான் சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் எதிரணியினருக்கு எவ்வாறு பந்துவீச வேண்டும், எவ்வாறு ஷாட்களை அடிக்கவேண்டும் என்று நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள்.

இந்திய அணி குழுவாக உடனுக்குடன் சூழலுக்கு ஏற்றார்போல் மாறிக்கொள்ள வேண்டும். ஏனென்றால், நியூஸிலாந்து மைதானம் மற்ற நாட்டு மைதானங்களைப் போல் அல்ல. வடிவத்தில் வித்தியாசமாக இருக்கும்.

இதற்கு முன் வெளிநாடுகளில் விளையாடியபோது, முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் அடித்து வெற்றி பெற்றிருக்கிறோம். அதுபோல் வெலிங்டனில் முயல்வோம். முதலில் பேட் செய்யும்போது உங்கள் மனநிலை நேர்மறையாக இருக்க வேண்டும். பந்துவீச்சைப் பற்றி நான் பேசவில்லை. வெளிநாடுகளில் விளையாடும்போது முதல் இன்னிங்ஸில் 320 ரன்களுக்கு அதிகமாகச் சேர்த்தாலே அது நல்ல ஸ்கோர் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால் இந்திய அணியில் உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் நிச்சயம் 320 ரன்கள் சேர்த்து எதிரணியைச் சுருட்டமுடியும். எந்த சூழலிலும் விக்கெட் வீழ்த்தும் திறமை கொண்டவர்கள் நமது பந்துவீச்சாளர்கள் என்பது எனக்குத் தெரியும்.

ஒருவேளை முதலில் பந்து வீச நேர்ந்தால் பந்துவீச்சாளர்களும் தங்கள் மனநிலையைச் சரியாக வைத்து விக்கெட்டுகளை வீழ்த்துவதும் அவசியம். ஒருவேளை டாஸில் தோல்வி அடைந்து பேட்டிங் செய்ய நேர்ந்தால், சூழலை எதிர்கொண்டு பேட்டிங் செய்து ரன்களைச் சேர்க்க வேண்டும்.

எந்த சூழலைப் பற்றியும் கவலையில்லை. ஒவ்வொரு சூழலும் எங்களுக்கு உள்நாட்டுச் சூழல் போலதான். வெற்றியோ அல்லது தோல்வியோ எதிர்பார்ப்புகள் அங்கு அதிகரிக்கும்.

டெஸ்ட் போட்டியில் முதல் செஷனில் ஆடுகளத்தில் ஈரப்பதம் இருக்கும் என்பதால் அதைப் பயன்படுத்தி சுழற்பந்துவீச்சு வீச வேண்டும். என்னைப் பொறுத்தவரை ரவிந்திர ஜடேஜாவைக் காட்டிலும், அஸ்வின்தான் சூழலுக்குப் பொருத்தமாக இருப்பார். ஆனால் மற்ற செஷன்கள் எவ்வாறு இருக்கும் என்பது எனக்குத் தெரியாது.

நியூஸிலாந்து ஆடுகளங்களைப் பொறுத்தவரை 2 நாட்களுக்குப் பின் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், சுழற்பந்துவீச்சாளர்கள் பணி மிகவும் முக்கியம். ஆதலால், ரவிந்திர ஜடேஜா அல்லது அஸ்வின் இருவரில் யாரை எடுக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். இருவருமே விக்கெட் வீழ்த்தும் திறமை படைத்தவர்கள்தான். யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் சரியாகப் பணியாற்றுவார்கள்.

பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரும் அனுபவம் குறைந்தவர்கள் என்றாலும் போட்டியைச் சாதகமாக அணுகக்கூடியவர்கள். இயல்பிலேயே எதிரணியின் பந்துவீச்சை அடித்து ஆடக்கூடியவர்கள். ஆதலால், அவர்களுக்கு அறிவுரை கூறத் தேவையில்லை''.

இவ்வாறு ரஹானே தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x