உமர் அக்மல் திடீர் சஸ்பெண்ட்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை

உமர் அக்மல் : கோப்புப்படம்
உமர் அக்மல் : கோப்புப்படம்
Updated on
1 min read

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான உமர் அக்மலை திடீரென சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்டில் உமர் அக்மல் பங்கேற்க முடியாது.

அவர் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்ற தெளிவான காரணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறவில்லை. ஆனால், அக்மல் மீது, ஊழல் தடுப்பு விசாரணை நடந்து வருவதால் கிரிக்கெட் விளையாட்டின் நலன் கருதி சஸ்பெண்ட் செய்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டு என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறிப்பிடவில்லை.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், "கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதன் மூலம் அவர் எந்தவிதமான உள்நாட்டு கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியாது. அவர் மீது ஊழல் விசாரணை நடந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர் அணியில் உமர் அக்மல் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரை அணியில் தேர்வு செய்து அறிவித்த சில மணிநேரத்தில் இந்த அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலின் சகோதரர் உமர் அக்மல் என்பது குறிப்பிடத்தக்கது. 29 வயதாகும் உமர் அக்மல் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1003 ரன்களும்,121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,194 ரன்களும், 84 டி20 போட்டியில் விளையாடி 1,690 ரன்களும் சேர்த்துள்ளார்.

இந்த மாத இறுதியில் பாகிஸ்தான் அணிக்கான உடல்தகுதித் தேர்வில் பங்கேற்ற உமர் அக்மல், பயிற்சியாளரிடம் தனது உடல் தகுதியை நிரூபிக்க ஆடைகளைக் களைந்து நின்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதே அக்மல் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in