Published : 20 Feb 2020 08:21 AM
Last Updated : 20 Feb 2020 08:21 AM

வெலிங்டனில் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்: நியூஸிலாந்தை சமாளிக்குமா இந்திய அணி?

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்ஆட்டம் வெலிங்டன் நகரில் நாளை அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

இந்தத் டெஸ்ட் தொடரானது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப்பில் தோல்வியை சந்திக்காமல் வலம் வருகிறது. இதுவரை 3 டெஸ்ட் தொடர்களை முழுமையாக வென்று 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. ஐசிசி உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப்பில் ஒரு அணி 6 தொடர்களை விளையாட வேண்டும்.

இந்த வகையில் இந்திய அணிக்கு நியூஸிலாந்துடன் மேலும்இரு தொடர்கள் எஞ்சியுள்ளது. கடைசி இரு தொடர்களிலும் இந்தியஅணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை சந்திக்கிறது. இந்திய அணி இதுவரை மேற்கிந்தியத் தீவுகள் (2-0), தென் ஆப்பிரிக்கா (3-0), வங்கதேசம் (2-0) ஆகிய அணிகளை வீழ்த்தியுள்ளது. இதில் கடைசி இரு தொடர்களை இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடி இருந்தது.

இந்திய அணி வீழ்த்திய 3 அணிகளுமே ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் கடைசி 3 இடங்களை வகிப்பவை ஆகும். இந்த அணிகளுடன் ஒப்பிடும் போது நியூஸிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் அசுர பலம் கொண்டது. இதனால் இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் விராட் கோலி குழுவினருக்கு கடும் சவாலாகவே இருக்கும். உண்மையாக கூற வேண்டுமெனில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியின்திறன் தற்போதுதான் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூஸிலாந்து அணி இதுவரை 2தொடர்களை விளையாடி உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை 1-1 என டிரா செய்திருந்த நியூஸிலாந்து அணியானது, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில்3-0 என படுதோல்வி கண்டது. 60 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள நியூஸிலாந்து அணிதனது எஞ்சிய 4 தொடர்களில்இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், வங்கதேச அணிகளை சந்திக்கிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் இருந்தாலும், சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணி இரு ஆட்டங்களையும் வென்று 120 புள்ளிகளை முழுமையாக கைப்பற்றுவதில் முனைப்பு காட்டக்கூடும்.

நியூஸிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் அடைந்த படுதோல்வியில் இருந்து மீண்டுவர வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை நியூஸிலாந்து அணி 3-0 என வென்றது அந்த அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது. ஏனெனில்டி 20 தொடரை 5-0 என முழுமையாக இழந்த நிலையில் முடங்கிவிடாமல் புத்தெழுச்சி பெற்று ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து அணி பதிலடி கொடுத்த விதம் பாராட்டுக்குரியதாக இருந்தது.

ராஸ் டெய்லரின் பார்ம் நியூஸிலாந்து அணிக்கு புதிய வலுவை கொடுத்துள்ளது. மேலும் டிரென்ட் போல்ட் காயத்தில் இருந்து மீண்டுடெஸ்ட் அணிக்கு திரும்பி உள்ளதுஒட்டுமொத்த அணியின் ஆற்றலையும் அதிகரிக்கச் செய்துள்ளது. தனது 100-வது டெஸ்டில் களமிறங்க உள்ள ராஸ் டெய்லர் பெரியஅளவில் அணிக்கு பங்களிப்பு செய்வதில் தீவிரம் காட்டக்கூடும்.

ராஸ் டெய்லருடன் பேட்டிங்கில் கேன் வில்லியம்சன், டாம் லேதம், பிளண்டெல், வாட்லிங், ஹென்றி நிக்கோல்ஸ், காலின் டி கிராண்ட் ஹோம் வலு சேர்ப்பவர்களாக உள்ளனர். பந்து வீச்சில் டிரென்ட் போல்ட், கைல் ஜெமிசன், டிம் சவுதி, காலின் டி கிராண்ட் ஹோம் ஆகியோரை உள்ளடக்கிய வேகக் கூட்டணி இந்திய பேட்டிங் வரிசைக்கு கடும் சவால்தரக்கூடும்.

வெலிங்டன் ஆடுகளம் பவுன்ஸருக்கு நன்கு ஒத்துழைக்கும். மேலும் காற்று வீசும் சூழலில் பந்துகள் நன்கு ஸ்விங் ஆகும்என்பதால் இந்திய பேட்ஸ்மேன்களின் திறன் கடும் சோதனைக்கு உள்ளாகக்கூடும். மயங்க் அகர்வால், பிரித்வி ஷா கூட்டணி தொடக்கத்தில் சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுப்பது அவசியம்.

சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விகாரி ஆகியோர் நடுவரிசையில் வேகப்பந்து வீச்சு தாக்குதலுக்கு எதிராக ஸ்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் நியூஸிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கலாம். அதேவேளையில் பந்து வீச்சில் பும்ரா, ஷமி, இஷாந்த், உமேஷ்யாதவ் ஆகியோரை உள்ளடக்கிய வேகக்கூட்டணி நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு தொல்லைகள் தரக்கூடும்.

உள்நாட்டு தொடர்களில் கேன் வில்லியம்சன் கேப்டன்ஷிப்பில் இதுவரை சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். பிரண்டன் மெக்கலம் ஓய்வு பெற்ற பிறகு வில்லியம்சன் தலைமையில் 8 தொடர்களை விளையாடி 7 தொடர்களை வென்றுள்ளது நியூஸிலாந்து அணி. இந்த தொடர்களில் 17 டெஸ்டில் ஒன்றில் மட்டுமே நியூஸிலாந்து அணி தோல்வி கண்டிருந்தது.

அதேவேளையில் இந்திய அணியின் வெளிநாட்டு பயணங்கள் கடந்த காலங்களில் வெற்றிகரமாக அமையவில்லை. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் கடந்த 9 சுற்றுப்பயணங்களில் தொடர்களை இழந்துள்ளது. விதிவிலக்காக கடந்த 2018-19-ம் ஆண்டு ஸ்மித், வார்னர் இல்லாத பலமிந்த ஆஸ்திரேலிய அணியை 2-1 என டெஸ்ட் தொடரில் தோற்கடித்திருந்தது இந்திய அணி.

தொடர்களை இழந்த 9 சுற்றுப்பயணங்களில் இந்திய அணி 22டெஸ்ட் போட்டிகளை விளையாடியது. இதில் சில ஆட்டங்களில்இந்தியஅணி கடும் போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்தியது. ஆனால் எந்த ஒரு சுற்றுப் பயணத்திலும் இந்திய அணி ஒரு டெஸ்ட்போட்டிக்கு மேல் வெற்றி பெற்றதும்இல்லை, தொடரை இழப்பதில் இருந்து தப்பிக்கவும் இல்லை.

இருப்பினும் வழக்கம் போல்இம்முறையும் இந்திய அணி மீதானஎதிர்பார்ப்புக்கு பஞ்சம் இல்லை. ஆஸ்திரேலிய தொடரின் தோல்வியில் இருந்து நியூஸிலாந்து அணி மீள நினைக்கும் அதேவேளையில் இந்திய அணியானது 3-வது முறையாக நியூஸிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதில் கவனம் செலுத்தக்கூடும். கடந்த1968-ம் ஆண்டு எம்ஏகே பட்டோடிதலைமையிலும், 2009-ம்ஆண்டு எம்எஸ் தோனி தலைமையிலும் நியூஸிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேரம்: அதிகாலை 4.00

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x