Published : 19 Feb 2020 06:04 PM
Last Updated : 19 Feb 2020 06:04 PM

இஷாந்த் சர்மா - விராட் கோலி : வலைப்பயிற்சியில் நடந்தது என்ன?

வெள்ளிக்கிழமை, பிப்.21ம் தேதி வெலிங்டனில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன, இதனையடுத்து இந்திய அணியினர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதில் இஷாந்த் சர்மா காயத்துக்குப் பிறகு மீண்டு வந்து நம்பர்1 பேட்ஸ்மேன் கோலிக்கு வீசினார். கோலியின் பலவீனத்தை மிகச்சரியாகப் பிடித்தார் இஷாந்த் சர்மா.

பந்து இன்ஸ்விங்கராக கோலி ஆஃப் ட்ரைவ் ஆட முற்பட்டார், ஆனால் இன்ஸ்விங்கராகி பந்து மட்டையின் உள்விளிம்பைக் கடந்து கால்காப்பைத் தாக்கியது. அதாவது ஜேசன் கில்லஸ்பி, இஷாந்த் சர்மாவுக்கு கொடுத்த அறிவுரையின் படி வேகத்தைக் குறைக்காமல் ஃபுல் லெந்த்தில் வீசுவது எப்படி என்கிற ஆலோசனைதான் அது.

“கில்லஸ்பி கொடுத்த அரிய தீர்வு என்னவெனில், ஃபுல் லெந்த் பந்தில் வேகம் கூட்ட பந்தை வெறுமனே வேகமாக வீசினால் போதாது, பந்தின் தையல் தரையில் படுமாறு வீச வேண்டும் என்றார். அப்போதுதான் பந்து பேட்ஸ்மேனின் முழங்காலைக் குறிவைக்கும் என்றார்” என்று கடந்த டிசம்பர் 29 அன்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ நேர்காணலில் தெரிவித்திருந்தார் இஷாந்த் சர்மா.

அதே போல்தான் இஷாந்த் சர்மா, விராட் கோலியின் முழங்காலை குறிவைத்து வீசினார், கோலி கால்காப்பில் வாங்கினார், கோலி இப்போதெல்லாம் பவுலர்களின் தையல் எப்பக்கம் இருக்கிறது என்பதைக் கணிப்பதில் சோடை போய் வருகிறார், அதனால்தான் அவுட் ஸ்விங்கர் பந்துகளை ட்ரைவ் ஆடப்போய் பீட் ஆகிறார், இன்ஸ்விங்கர் பந்துகளை நேர் பேட்டில் ஆடாமல் பிளிக் ஆட முயன்று முன்னால் சாய்கிறார். இந்தப் பலவீனத்தை இஷாந்த் சர்மா பயன்படுத்திக் கொண்டார்.

ஷமி, சைனி, பும்ரா அனைவரும் விராட் கோலிக்கு வீசினர், அதன் பிறகு மீண்டும் இஷாந்த் சர்மா வீச பந்து ஃபுல் லெந்துக்கும் சற்று குறைவாக பிட்ச் ஆகி ஸ்விங் ஆகி வெளியே சென்றது விராட் கோலி பீட்டன் ஆனார்.

ஒரு மாதத்திற்கு முன்பாக ரஞ்சி ட்ராபி ஒன்றில் இஷாந்த் சர்மா காலில் காயம் ஏற்பட்டது, அதன் பிறகு இப்போதுதான் அவர் வீசுகிறார். வலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடைவெளியின்றி அவர் வீசியதாக அணி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விராட் கோலி செய்தியாளர்களிடம் கூறிய போது, “காயத்துக்கு முன்னால் எப்படி வீசுவாரோ அப்படியேதான் வீசுகிறார், நல்ல இடங்களில் பந்தை பிட்ச் செய்கிறார். நல்ல வேகத்தில் வீசுகிறார், இது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x