Last Updated : 19 Feb, 2020 01:54 PM

 

Published : 19 Feb 2020 01:54 PM
Last Updated : 19 Feb 2020 01:54 PM

நியூஸி முதல் டெஸ்டில் விளையாடும் 'பிளேயிங் லெவன்' யார்? அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா? விராட் கோலி சூசக அறிவிப்பு

நியூஸிலாந்துக்கு எதிராக வரும் 21-ம் தேதி வெலிங்டனில் தொடங்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட வீரர்கள் குறித்து கேப்டன் விராட் கோலி சூசகமாக அறிவித்துள்ளார்.

நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை 5-0 என்ற கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியது. இந்நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் வெள்ளிக்கிழமை வெலிங்டனில் தொடங்குகிறது.

இந்திய அணியில் காயம் காரணமாக ரோஹித் சர்மா, ஷிகர் தவண் அணியில் இல்லாதது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், காயத்திலிருந்து குணமடைந்து வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா அணிக்குத் திரும்பியுள்ளது ஆறுதலான விஷயமாகும்.

இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் விளையாடும் 11 பேர் யார் என்பது அறிவிக்கப்படாத நிலையில், அதுகுறித்து கேப்டன் விராட் கோலி சூசகமாக அறிவி்த்துள்ளார்.

வெலிங்டனில் விராட் கோலி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இசாந்த் சர்மா உடல்நிலை தேறி இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார். காயம் ஏற்படுவதற்கு முன் எவ்வாறு பந்துவீசினாரோ அதேபோல இப்போதும் சரியான லென்த்தில் வேகத்தில் பந்துவீசுகிறார். இசாநத் சர்மாவின் வேகம், பவுன்ஸர் பந்துவீச்சு நியூஸிலாந்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஏற்கனவே நியூஸிலாந்துக்கு சென்று விளையாடிய அனுபவம் இசாந்த் சர்மாவுக்கு இருப்பது கூடுதல் பலம்.

பிரித்திவ் ஷா புத்திசாலியான பேட்ஸ்மேன். அவரின் வழக்கமான விளையாட்டை விளையாட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆடுகளம் புதிது, சூழல் புதிது என்ற பார்க்காமல் துணிச்சலாக விளையாடக் கூடியவர் பிரித்வி ஷா. தொடக்க ஆட்டத்துக்குச் சரியான வீரர் என்பதில் சந்தேகமில்லை.

அதேபோல மயங்க் அக்ரவால் ஆஸ்திரேலியாவில் இரு அரைசதங்கள் அடித்து, வெளிநாடுகளில் பயமில்லாமல் விளையாடக்கூடியவர் என்பதை நிரூபித்துள்ளார். அதிகமான ரன் அடிக்காதவர் மயங்க் அகர்வால் என்று நிராகரிக்க முடியாது. அவர் கடந்த ஆண்டில் சிறப்பாக விளையாடியவர்.

இரு வீரர்களும் வெளிநாடுகளில் அச்சமின்றி விளையாடக்கூடியவர்கள் என்பதால் இவர்கள் ஆட்டத்தைத் தொடங்குவது அணிக்கு உற்சாகமாக அமையும். இருவரும் டெஸ்ட் போட்டிகளில் ஒழுக்கமான ஆட்டத்தை விளையாடக் கூடியவர்கள் என்பதால், டெஸ்ட் போட்டிக்கு பொறுத்தமானவர்கள்.

விக்கெட் கீப்பரைப் பொறுத்தவரை ரிஷப் பந்துக்கு பதிலாக விருதிமான் சாஹாதான் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நியூஸிலாந்து அணியில் இருக்கும் வேகப்பந்துவீச்சுக்கு இணையாக இந்திய அணியிலும்வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர்கள் அவசியம். ஆதலால் முதல் டெஸ்ட்போட்டியில் ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர் இருப்பார்.

ஜோகன்ஸ்பர்க் போன்ற ஆடுகளத்தில் நிச்சயம் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவேன். ஆனால் இங்கு நிச்சயம் ஒரு சுழற்பந்துவீச்சாளர் இருப்பார். எந்த ஆடுகளத்திலும் விக்கெட் எடுக்கும் சுழற்பந்துவீச்சாளராக இருப்பது அவசியம்.

கடந்த முறை வந்ததைக்காட்டிலும் இந்தமுறை பந்துவீச்சு வலுவாக இருக்கிறது. இசாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இந்த கூட்டணி பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளது.
இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்

ஆதலால், முதலாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப்ந்த், சுப்மான் கில் ஆகியோருக்கு வாய்ப்பு இல்லை என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. 5-வது பந்துவீச்சாளராக ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்படவும் வாய்ப்புள்ளது. ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர் என்ற முறையில் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா இருவரில் ஒருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில்தான் சந்தேகம் இருக்கிறது. ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர் என்ற அடிப்படையில் அஸ்வின் தேர்வாக வாய்ப்புள்ளது.

விளையாடும் 11 வீரர்கள் உத்தேச அணி:

தொடக்க வீரர்கள்: மயங்க் அகர்வால், பிரித்வி ஷா
நடுவரிசை வீரர்கள்: புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி
விக்கெட் கீப்பர்: விருதிமான் சாஹா
சுழற்பந்துவீச்சாளர்: அஸ்வின் அல்லது ரவிந்திர ஜடேஜா
வேகப்பந்துவீச்சாளர்கள்: பும்ரா, முகமது ஷமி, இசாந்த் சர்மா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x