Last Updated : 19 Feb, 2020 12:58 PM

 

Published : 19 Feb 2020 12:58 PM
Last Updated : 19 Feb 2020 12:58 PM

யார் அந்த 3 பேர்? கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய அந்த 3 பேட்ஸ்மேன்கள்: இன்ஸமாம் உல் ஹக் புகழாரம்

சர்வதேச கிரிக்கெட்டின் முகத்தை தங்களின் ஆக்ரோஷமான பேட்டிங், ஷாட்களால் 3 பேட்ஸ்மேன்கள் மாற்றியுள்ளார்கள். இன்று கிரிக்கெட் விளையாட்டு சுவாரஸ்யமாகச் சென்றதற்கு அந்த 3 பேர்தான் காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் புகழாரம் சூட்டியுள்ளார்.

டி20 போட்டிகள் வருவதற்கு முன் ஒருநாள் போட்டிகளில் முடிவைப் பார்க்க வேண்டுமென்றால் காலை முதல் மாலை வரை காத்திருக்க வேண்டும். அதிலும் சில நேரங்களில் வீரர்களின் மந்தமான பேட்டிங்கைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு பெரும் வெறுப்பாக இருக்கும். ஆனால், ஒருநாள் போட்டிகளையும் ரசிக்கும் விதமாக, சுவாரஸ்யமாக சில வீரர்கள் தங்கள் பேட்டிங் மூலம் மாற்றினார்கள்.

இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

''சர்வதேச கிரிக்கெட்டின் முகத்தை ரசிக்கும் விதமாக 3 பேட்ஸ்மேன்கள் மாற்றினார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களில் முதலாவது வீரர் மே.இ.தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் விவியன் ரிச்சார்ட்ஸ்.
வேகப்பந்துவீச்சாளர்களை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளும் விதத்தை கிரிக்கெட்டில் மாற்றி அமைத்தவர் ரிச்சார்ட்ஸ் என்பதில் மாற்றமில்லை. கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சைப் பார்த்து பேட்ஸ்மேன்கள் பயந்த நிலையில் அதை உடைத்து எறிந்தவர் ரிச்சார்ட்ஸ்தான்.

அந்த நேரத்தில் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்துவீச்சை பேக்புட் செய்து விளையாடி நிலையில், ரிச்சார்ட்ஸ் துணிச்சலாக பிரன்ட் புட் வைத்து விளையாடி மிரள வைத்தார். வேகப்பந்துவீச்சை அடித்து விளையாட வேண்டும் என்று பேட்ஸ்மேன்களுக்கு கற்றுக்கொடுத்த ரிச்சார்ட்ஸ் மிகச் சிறந்த வீரர்.

2-வதாக ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஓவர்களை எவ்வாறு பேட்ஸ்மேன்கள் அணுக வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்தவர் இலங்கை வீரர் ஜெயசூர்யா. கிரிக்கெட்டில் 2-வது மாற்றத்துக்கு வித்திட்டவர் ஜெயசூர்யா.

முதல் 15 ஓவர்களில் வேகப்பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்யும் பாணியை பேட்ஸ்மேன்களுக்குக் கற்றுக்கொடுத்தார். ஜெயசூர்யா தொடக்க வீரராக வருவதற்கு முன், எந்த அணியிலாவது தொடக்க ஆட்டக்காரர்கள் அடித்து ஆடி, பந்தை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினால் அவர் முறையான பேட்ஸ்மேன் இல்லை என்ற பெயர் இருந்தது.

அந்த எண்ணத்தை மாற்றியவர் ஜெயசூர்யா. முதல் 15 ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என்ற புதிய உத்தியை ஜெயசூர்யா அறிமுகப்படுத்தினார்.

மூன்றாவதாகத் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ். தன்னுடைய ஒட்டுமொத்த ஷாட்களாலும் எந்த சூழலிலும் ரன்களைச் சேர்க்க முடியும் என்ற மாற்றத்தைக் கொண்டுவந்தவர். ஒருநாள், டி20 போட்டிகள் என வேகமாக கிரிக்கெட் பரிணாம வளர்ச்சி அடைந்திருந்த நேரத்தில் டிவில்லியர்ஸின் பேட்டிங் முக்கியமானதாக இருந்தது.

டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் வருவதற்கு முன் பேட்ஸ்மேன்கள் பாரம்பரிய ஷாட்களைத்தான் விளையாடி வந்தார்கள். ஆனால், முதல் முறையாக டிவில்லியர்ஸ் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் என எந்த சூழலிலும் விளையாட முடியும், ரன்களை எப்படி வேண்டுமானாலும் சேர்க்கலாம் என 360 டிகிரி கோணத்திலும் விளையாடுவதை அறிமுகப்படுத்தினார். இந்த 3 பேட்ஸ்மேன்கள்தான் கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர்கள்''.

இவ்வாறு இன்ஸமாம் உல்ஹக் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x