Published : 18 Feb 2020 04:07 PM
Last Updated : 18 Feb 2020 04:07 PM

பும்ராவை கவனமாக ஆடும் அணுகுமுறையை மற்ற அணிகளும் பின்பற்றும்.. நீல் வாக்னர் பவுன்சர்களில் இந்தியர்கள் திணறுவார்கள்: ஷேன் பாண்ட் 

தன் காலத்தில் அதிவேக நியூஸிலாந்து பவுலராக இருந்த ஷேன் பாண்ட், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை நியூஸிலாந்து வீரர்கள் ஒர்க் அவுட் செய்து விட்டனர் என்றார். அதாவது அவர் வீசும் போது ரிஸ்க் எடுக்காமல் மற்றவர்களை அடித்துக் கொள்ளலாம் என்று ஜாகீர் கான் கூறிய அதே கருத்தை ஷேன் பாண்டும் கூறுகிறார்.

பும்ரா நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 167 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை. பும்ராவுடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பவுலிங் பயிற்சியாளராக ஷேன் பாண்ட் நிறைய பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“பும்ரா போன்ற பவுலர்கள் மீது எதிர்பார்ப்புகள் இருக்கும். ஏனெனில் அவர் தரமான ஒரு வீச்சாளர். நியூஸிலாந்து அவரை நன்றாக ஆடினார்கள் என்றே கருதுகிறேன். அவரை அடித்து ஆடுவது ரிஸ்க் என்பதை உணர்ந்து ஆடி பயன்பெற்றனர், சைனி மற்றும் தாக்கூருக்கு அனுபவம் போதாது.

அனைத்து அணிகளுமே இனி பும்ராவை ஜாக்கிரதையாக ஆடிவிட்டு மற்றவர்களை அடித்து ஆடத் தொடங்குவார்கள், பாரம்பரிய முறையில் நியூஸிலாந்து பும்ராவை ஆடியது. நியூஸிலாந்தில் முதல் நாளைத் தவிர பந்துகள் ஸ்விங் ஆகாது எனவே பும்ராவுக்குக் கஷ்டம்தான்.

கடைசியில் ஒரு பவுலர் என்ன செய்ய முடியும் நன்றாக வீச முடியும் அவ்வளவே பும்ரா நன்றாக வீசினார் ஆனால் விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை.

அதுவும் காயத்திலிருந்து வந்து வீசுவது என்பது கடினம். ஒருநாள் போட்டிகளில் நியூஸிலாந்து பும்ராவை நன்றாக எதிர்கொண்டனர் ஆனால் டெஸ்ட் போட்டிகளில் பும்ரா தாக்கம் செலுத்த முடியும்.

நியூஸிலாந்தில் பிரச்சினை என்னவெனில் பிட்ச் சுத்தமாக ஸ்பின் எடுக்காது, டாஸ் வெல்லும் அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்யும், ஏனெனில் முதல் நாள் கொஞ்சம் பந்துகள் ஸ்விங் ஆகும். நியூஸிலாந்து டாஸ் வென்றால் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்யும்.

நியூஸி. ஸ்பின்னரைத் தேர்வு செய்யவில்லை எனில் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

நியூஸிலாந்து அணி 5 வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்யும். ட்ரெண்ட் போல்ட், சவுத்தி, வாக்னர், ஜேமிசன், டி கிராண்ட் ஹோம் ஆகியோர் ஆடுவார்கள் என நினைக்கிறேன், பிட்ச் போகப்போக மட்டை ஆட்டக்களமாகவே இருக்கும். நியூஸிலாந்தை இங்கு வீழ்த்துவது மிகமிகக் கடினம். இப்போதும் அது வித்தியாசப்படாது என்றே கருதுகிறேன்.

நீல் வாக்னர் தொடக்க வீரர்களுக்கு அடுத்ததாக 3வது வீரராக வீசுவார், இந்த சூழ்நிலையில் வாக்னர் வித்தியாசமான பவுலர், இவரைப்போன்ற ஒரு பவுலரை நாம் அடிக்கடி சந்திக்க முடியாது. அவர் பவுன்சர்களை வீசும் போது இந்திய அணிக்குக் கடினமே.

வெலிங்டன், கிறைஸ்ட் சர்ச் இரண்டுமே பெரிய மைதானங்கள் எனவே வாக்னரின் ஷார்ட் பிட்ச் உத்தி அவ்வளவு சுலபமாக ஆடக்கூடியதல்ல.

நிச்சயம் இந்தியாவை ஷார்ட் பிட்ச், பவுன்சரில் கஷ்டப்படுத்துவார்கள், இதற்கு இரண்டு பவுலர்கள் அங்கு உள்ளனர், கைல் ஜேமிசன், நீல் வாக்னர்” என்றார் ஷேன் பாண்ட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x